×

நோயாளிகளுடன் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் பாஜக ஊர்வலம் சென்றதாக அதிமுகவினர் புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட மறுத்து பாஜகவினர் ஊர்வலம் சென்றதாக அதிமுக-வினர் புகார் அளித்துள்ளனர். பாஜக ஊர்வலத்தால் வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதாகவும் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். முன்னதாக அவர், கோரிமேடு கோயிலில் பூஜை செய்துவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக வந்தார். அவரது வாகனத்திற்கு பின்புறம் ஆதரவாளர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள், பாஜகவினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பிறகு நமச்சிவாயம் வந்த காரை மட்டும் அனுமதித்தனர். அவருடன் வந்த மற்ற வாகனங்களை 100மீ தொலைவிற்கு முன்னரே தடுத்து நிறுத்தினர். இதனால் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருவதற்காக நோயாளிகளை ஏற்றுக்கொண்டு வேகமாக ஆம்புலன்ஸ் ஒலி எழுப்பிக்கொண்டு வந்தது.

ஆனால் சாலையில் நமச்சிவாயம் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த வாகனங்கள் இருந்ததால் நோயாளிகளுடன் வந்த வாகனம் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் வந்த வழியிலேயே திரும்பி சென்றது. நோயாளிகளுடன் வந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் பாஜக ஆதரவாளர்கள் வழியிலேயே நின்றது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தின் முன் திரண்டனர். ஆனால் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவரின் ஆதரவாளர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

The post நோயாளிகளுடன் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் பாஜக ஊர்வலம் சென்றதாக அதிமுகவினர் புகார் appeared first on Dinakaran.

Tags : Commissioner ,BJP ,Puducherry ,Supreme Leader ,NAMACHIWAAM ,Dinakaran ,
× RELATED மது கடைகளை மூட உத்தரவு