×

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மதிமுக தாக்கல் செய்த மனு நாளை தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகிறது. மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,’கடந்த 1996ம் ஆண்டு முதல் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றதாக கூறி கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது போல, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்தோம். அதன்மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மதிமுக தேர்தல் சின்னம் வழக்கில் இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ‘தேர்தல் மனு தாக்கல் நடைமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தங்கள் கோரிக்கை மனு மீது எந்த முடிவும் எடுக்கவில்லை, அதனால் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று மதிமுக சார்பில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று முறையீடு செய்யப்பட்டது. மதிமுக முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், நாளை வழக்கு விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

The post மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை appeared first on Dinakaran.

Tags : MDMK ,CHENNAI ,Madhyamik ,Election Commission ,general secretary ,Vaiko ,Court ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி