×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு

*தோட்டக்கலை துறையினர் ஆலோசனை

வருசநாடு : கடமலைக்குண்டு மயிலாடும்பாறை வருசநாடு கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் பல்வேறு தோட்டக்கலை பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக காலிபிளவர் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதனால் பயிர்களை பாதுகாப்பது பற்றி கடமலைக்குண்டு வட்டார தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர். இதுகுறித்து கடமலைக்குண்டு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜபிரியதர்ஷன் தெரிவித்துள்ளதாவது:

அதிக அளவில் பயிர்களுக்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி மற்றும் வெட்டுப்புழுக்கள், வைரமுதுகு அந்துப்பூச்சி போன்றவை காலிபிளவரை தாக்கும் முக்கியமான பூச்சிகளாகும். அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒட்டும் மஞ்சள் அட்டை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும். வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது ஒரு லிட்டர் நீரில் டை மெத்தோயேட் 2 மில்லி மற்றும் 0.5 மில்லி டீப்பாலை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த கலவையுடன் சேர்த்துத் தெளிக்கவேண்டும்.

வெட்டுப்புழுக்கள்

இதனைக் கட்டுப்படுத்த கோடைக் காலத்தில் விளக்குப்பொறி வைக்கவேண்டும். குளோரிபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும்.

வைர முதுகு அந்துப்பூச்சி

இப்பூச்சி பழுப்பு நிறத்தில் மிகச்சிறியதாகவும் மூங்கில் வைரம் போன்ற அமைப்பும் இருக்கும். இப்பூச்சி அதன் முட்டைகளை இலை, குருத்து மற்றும் தனித்தனியாகவோ, குவியலாகவோ இடும். இம்முட்டைகள் ஓரிரு நாட்கள் பொறித்து இளம் புழுக்கள் வரும். இப்புழுக்கள் செடியினை அரித்துச் சாப்பிடும். இப்புழுக்களால் தாக்கப்பட்ட இளம் செடிகளின் வளர்ச்சி நின்றுவிடும். வளர்ச்சி அடைந்த செடிகளின் இலைகள், ஓட்டைகள் நிறைந்ததாகவும் முக்கியமான பாகமாகிய பூக்கள் சிறியதாகவும், மிகவும் சேதமடைந்ததாகவும் இருக்கும். இதனால் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படும்.

இப்பூச்சியைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட முறைகளை மேற்கொள்ளவேண்டும்.கடுகுப் பயிரை ஊடுபயிராக 20:1 என்ற விகிதத்தில் பயிரிடவேண்டும்.இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.ஒரு கிராம் கார்டாப் ஹைட்ரோ குளோரைடு மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.இப்பூச்சியின் புழுப்பருவத்தை தாக்கி அழிக்கும் தன்மை வாய்ந்த பேசில்லஸ் தூரியன்சிஸ் என்ற பாக்டீரியாவைக் கொண்டு தயாரித்த உயிர் பூச்சிக்கொல்லி மருந்தை எக்டருக்கு 1.50-2.00 மில்லி என்ற அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.எக்டருக்கு 50,000 என்ற எண்ணிக்கையில் புழு ஒட்டுண்ணிணை நட்ட 60 நாட்கள் கழித்துவிடவேண்டும்.

இலைப்புள்ளி நோய்

இதனைக் கட்டுப்படுத்த கார்பென்டாசிம் ஒரு கிராம் அல்லது மேன்கோசெய் 3 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்கவேண்டும். மேலும் விவசாயிகள் விவசாய பயிர்களில் சந்தேகம் இருப்பின் கடமலைக்குண்டு தோட்டக்கலை அலுவலகத்தை அணுக வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Kadamalai-Maylai union ,Varusanadu ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்