×

வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்

*ஆதாரவிலையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

வருசநாடு : தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளது. இதனால் வருசநாடு பகுதியில் விளைந்த தேங்காய்கள் விற்பனைக்கு அனுப்பப்படாமல் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.தேனி மாவட்டம், வருசநாடு பகுதியில் தேங்காய் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து சென்னை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, காங்கேயம், கான்சாபுரம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு தேங்காய்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் தேங்காய் விலை சரிவடைந்துள்ளது. இதையடுத்து தேங்காய்களுக்கு வியாபாரிகளிடம் உரிய விலை கிடைக்காததால் விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. இதன் காரணமாக தேங்காய்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:கடமலை மயிலை ஒன்றிய பகுதிகளில் இருந்து மட்டும் ஒரு நாளில் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. ஆனால், தேங்காய்கள் அதிக வரத்து காரணமாக விலை சரிந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் ஒரு தேங்காய் ரூ.10 முதல் ரூ.11 வரையிலான விலையில் வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

உரிய விலை கிடைக்காததால் வருசநாடு பகுதி விவசாயிகள் தேங்காய்களை அனுப்ப தயங்குகின்றனர். தற்போது ஒரு நாளில் 4 லாரிகளில் மட்டுமே தேங்காய் அனுப்பப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம். இதேநிலை நீடித்தால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவர். எனவே, தேங்காய்களுக்கு உரிய ஆதார விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள் appeared first on Dinakaran.

Tags : Varasanat ,Varusanadu ,Tamil Nadu ,Theni district ,
× RELATED கடமலைக்குண்டு மலையடிவார கிராமங்களில்...