×

மாவட்டத்தில் 2,520 வாக்குச்சாவடிகள் 3,044 வாக்குப்பதிவு எந்திரங்கள் 3,279 விவி பேட்டுகள் ஒதுக்கீடு

திருப்பூர் : நாடாளுமன்ற தேர்தலையொட்டி தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்களை சீல் வைத்து வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி நிறைவு செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டது.

இதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கு திறக்கப்பட்டு வழங்கப்பட்டது.

அதன்படி தாராபுரம் (தனி) தாராபுரம் அரசு கலைக்கல்லூரியில் இருப்பு வைக்கப்பட உள்ளது. மொத்த வாக்குச்சாவடிகள் 298 உள்ளன. கட்டுப்பாட்டு கருவிகள் 360, வாக்குப்பதிவு எந்திரங்கள் 360, விவிபேட் எண்ணிக்கை 390 ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல் காங்கயம் தொகுதிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகள் 295 உள்ள நிலையில், கட்டுப்பாட்டு கருவிகள் 356, வாக்குப்பதிவு எந்திரங்கள் 356, விவிபேட் எண்ணிக்கை 386 ஒதுக்கப்பட்டுள்ளது. அவினாசி (தனி) தொகுதிக்கு அவினாசி அரசு கலைக்கல்லூரியில் இருப்பு வைக்கப்பட உள்ளது.

மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 313 உள்ளது. கட்டுப்பாட்டு கருவிகள் 378, வாக்குப்பதிவு எந்திரங்கள் 378, விவிபேட் 410 ஒதுக்கப்படுகிறது. திருப்பூர் வடக்கு தொகுதிக்கு ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட உள்ளது. 379 வாக்குச்சாவடிகள் உள்ளது. 458 கட்டுப்பாட்டு கருவிகளும், 458 வாக்குப்பதிவு எந்திரங்களும், 496 விவிபேட் எந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு குமரன் பெண்கள் மகளிர் கல்லூரியில் இருப்பு வைக்கப்பட உள்ளது. 242 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், 292 கட்டுப்பாட்டு கருவிகள், 292 வாக்குப்பதிவு எந்திரங்கள், 292 விவிபேட் எந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல்லடம் தொகுதிக்கு பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட உள்ளது. 412 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், 498 கட்டுப்பாட்டு கருவிகள், 498 வாக்குப்பதிவு எந்திரங்கள், 539 விவிபேட் எந்திரங்கள் ஒதுக்கப்பட உள்ளன. உடுமலை தொகுதிக்கு உடுமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருப்பு வைக்கப்பட உள்ளது. 294 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், 355 கட்டுப்பாட்டு கருவிகள், 355 வாக்குப்பதிவு எந்திரங்கள், 385 விவிபேட் எந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இறுதியாக மடத்துக்குளம் தொகுதிக்கு மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் 287 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், கட்டுப்பாட்டு கருவிகள் 347, வாக்குப்பதிவு எந்திரங்கள் 347, விவிபேட் எந்திரங்கள் 375 ஆகியவை ஒதுக்கப்பட்டது. 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தம் 2,520 வாக்குச்சாவடிகள், 3,044 கட்டுப்பாட்டு கருவிகள், 3,044 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3,279 விவிபேட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வழங்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் நேற்று அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைத்து அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன் மற்றும் பலர் உள்ளனர்.

இதன் பின்னர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வாக்கு எண்ணும் மையமான எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறை மற்றும் அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணும் தினத்தன்று மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினவ், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், துணை போலீஸ் கமிஷனர் கிரிஷ் அசோக் யாதவ், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், சப-கலெக்டர் சவுமியா ஆனந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

காங்கயம் : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து 356 ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் காங்கயம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார், தாசில்தார் மயில்சாமி முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முன்பாக பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானதுடன் வாக்கு பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

உடுமலை: திருப்பூரில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடுமலை அரசு கலை கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடுமலை தாசில்தார் சுந்தரம் தலைமையில் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த இயந்திரங்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்வந்த் கண்ணன் முன்னிலையில் இறக்கி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. அங்கு போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post மாவட்டத்தில் 2,520 வாக்குச்சாவடிகள் 3,044 வாக்குப்பதிவு எந்திரங்கள் 3,279 விவி பேட்டுகள் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Bates ,Tirupur ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...