×

சேத்தியாத்தோப்பில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசு கட்டிடம்

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியின் எதிரில் அரசு காதி மற்றும் கைத்தறி துறைக்கு சொந்தமான பழமையான கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அரசு காதி துறை மற்றும் கைத்தறி துறையினருக்கு சொந்தமான கட்டிடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே உள்ளது. இக்கட்டிடத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சேத்தியாத்தோப்பு அருகே விருத்தாசலம்-புவனகிரி சாலையில் மிராளூர் கிராமத்தில் மார்க்கெட் கமிட்டி அமைக்க ஏதுவாக நிலம் அளவீடு செய்யப்பட்டு கையகப்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் அலுவலக கட்டிடம், குடோன்கள் மற்றும் களன் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்று ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மிராளூர் கிராமத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் காதி கிராப்ட்டுக்கு சொந்தமான கட்டிடத்தை அதன் துறை சார்ந்த அதிகாரிகள் பராமரிக்காமல் விட்டதால் கட்டிடத்தின் கதவுகளின் பூட்டை சமூக விரோதிகள் உடைத்து கதவுகளையும் கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளனர். தற்போது இக்கட்டிடமானது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. மேலும் கார் மற்றும் வேன்கள் நிறுத்தும் ஸ்டேண்டாகவும் மாறியுள்ளது.

இந்த அலுவலகம் இயங்கி வந்த காலங்களில் பாதுகாப்பாக இருந்து வந்த கட்டிடம் தற்போது கேட்பாரற்று கதவுகள் உடைக்கப்பட்டு மது அருந்தும் திறந்த வெளி பாராகவும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கேட்பாரற்று கிடக்கும் சேதமடைந்த காதி அலுவலக கட்டிடத்தை அகற்றிவிட்டு மீண்டும் அவ்விடத்தில் புதியதாக கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அக்கட்டிடத்தை சுற்றி தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சேத்தியாத்தோப்பில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசு கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Chetiathop ,Chetiathope ,khadi ,handloom ,
× RELATED அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்...