×

திருச்செந்தூர் நகராட்சியில் பொழுதுபோக்கு, கலாசார நினைவாக இருந்த தியாகிகள் ஸ்தூபி, அம்பேத்கர் பூங்கா பராமரிக்கப்படுமா?

* திறந்தவெளி மதுபான கூடமாக மாறிய அவலம்

திருச்செந்தூர் : திருச்செந்தூர் நகராட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் பூங்காவில் பராமரிப்பின்றி காணப்படும் காமராஜர் சிலை மற்றும் சுதந்திர போராட்ட நினைவு ஸ்தூபி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் தியாகி வாரிசுகள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு மற்றும் அதிக திருவிழாக்கள் நிறைந்து காணப்படும் கோயில் நகரமாக திருச்செந்தூர் உள்ளது.

2021ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 27 வார்டுகளில் சுமார் 5 ஆயிரக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை கொண்டுள்ளது. திருச்செந்தூருக்கு திருவிழாக்காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் வந்து தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோயில் கடற்கரையை தவிர நகராட்சியில் பொழுது போக்கு என்று எதுவுமே இல்லை என்ற நிலைதான் நிஜம். நகராட்சி சார்பில் கோயில் மற்றும் மாட்டுத்தாவணி பகுதியில் அமைக்கப்பட்ட இரண்டு பொழுது போக்கு பூங்காக்களும் பயன்பாட்டுக்கு பொருந்தாமல் காலாவதியாகிவிட்டது.

தற்பொழுது 2வது வார்டுக்குட்பட்ட சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள அன்பு நகரில் மட்டுமே அப்பகுதி மக்களுக்காக பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் திருச்செந்தூர் பேரூராட்சியாக இருந்த போது பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள அம்பேத்கர் நினைவு பூங்காவும் அதனருகே இருந்த வாசக சாலையும் பொதுமக்களின் ஒரே ஒரு பாரம்பரியமான பொழுதுபோக்கு அம்சமாகவும், கலாச்சார நினைவாகவும் இருந்தது.

அதனால் தான் பூங்காவில் தமிழகத்தினை பல்வேறு அணைகள் மற்றும் பாலங்கள் தந்த பெருந்தலைவர் திருவுருவச்சிலையும், திருச்செந்தூர் சுற்று வட்டாரத்தில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள் மற்றும் இன்னுயிர் நீத்த வீரர்களின் நினைவு ஸ்தூபியும் அமைக்கப்பட்டது. அந்த பூங்கா மற்றும் வாசகர் சாலையினை அப்போதைய ஒன்றிய ராணுவ அமைச்சர் ஜெகஜீவன்ராம் வந்து திறந்து வைத்த பெருமையும் உண்டு.

ஆனால் காலப்போக்கில் பேரூராட்சி நிர்வாகம் அதனை முறையாக பராமரிக்காததால் பூங்காவானது திறந்த வெளி மது அருந்தும் பாராக மாறியது. அதன்பிறகு வாசகர் சாலையானது தூர்ந்து போனதால் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கையே குறைந்தது. மேலம் பூங்காவினை பூட்டி வைத்து, அதனை உடைந்து போன கொடிகம்பிகள் மற்றும் இரும்பு ஆர்ச்சை போட்டு புனிதத்தை கெடுத்த பெருமையும் பேரூராட்சியையே சேரும்.

நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

தற்போது நகராட்சியாக மாறிவிட்ட போதும் பூங்காவையும், ஸ்தூபியையும் முறையாக பராமரிக்காததால் அது பூட்டிக்கிடக்கும் புனித இடம் என்றாகி விட்டது. வருடத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள், நினைவு நாளிலும், முக்கிய அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்ற அன்று மட்டும் இங்கு வந்து பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து செல்கின்றனர். மற்ற நாட்களில் அனைவரும் மறந்தும் கூட இப்பகுதிக்கு வராத நிலையாகி விட்டது.

தெரியாத நிலையில் பூங்கா :
இந்தியாவிலே பஞ்சாப் மாநிலத்தில் தான் அதிகளவில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் திருச்செந்தூர் தாலுகாவில் தான் அதிகப்படியான சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளனர். இங்கு மட்டும் தெரிந்த வரைக்கும் 405 சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மரண தண்டனையும், ஆயுள் மற்றும் சிறைத்தண்டனை பெற்றவர்கள் உள்ளனர். அதில் 385 பேருடைய பெயர் விபரங்கள் திருச்செந்தூர் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

திருச்செந்தூர் நகராட்சிக்கு எதிரே நேர் பார்வையில் பூங்கா இருந்தும் அதனை முறையாக பொதுமக்கள் பார்வையிடும் வகையிலும், குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த விபரம் அடங்கிய ஒரே ஸ்தூபியை பார்த்து வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே பூங்காவை பகல் நேரத்தில் அதன் வாசல் கதவுகளை திறந்து வைத்தும், இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ள நிலையினை போக்கும் வகையில் போதிய மின் விளக்குகளை அமைத்து பூங்காவை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மேம்படுத்த வேண்டும்.

மேலும் பூங்காவின் வாசலை வழிமறித்து நிற்கும் ஆக்ரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.இது குறித்து நகராட்சி பூங்கா அமைந்திருக்கும் 8வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி செண்பகராமன் கூறியதாவது,சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு ஸ்தூபியை பள்ளி மாணவர்கள் பார்க்கும் விதமாக அதனை நகராட்சி பராமரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து அமைச்சர், எம்பியிடமும் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

எங்கள் வார்டு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களே பொழுது போக்கு பூங்கா அமைத்து தர வேண்டும் என கேட்கின்றனர்;. இரவு நேரங்களில் பூங்கா திறந்து கிடப்பதால் அதனுள்ளே சமூக விரோத செயல்கள் நடப்பதால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் பூங்காவினை முறையாக பராமரித்து பொதுமக்கள் வந்து செல்லும் விதமாக வாசலை விரிவுப்படுத்தி, பணியாளர்கள் மற்றும் இரவு நேர காவலர்களை நியமிக்க வேண்டும் என்று கூறினார்.

இது குறித்து தியாகிகள் வாரிசுகள் நலச்சங்க நிர்வாகி அமலிநகரைச் சேர்ந்த அசோகன் கூறியதாவது,எனது தந்தை தியாகி பெஞ்சமின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். அவர் விடுதலையான பிறகு எங்கள் வீட்டிற்கு பெருந்தலைவர் காமராஜர் நேரில் வந்து அப்பாவை சந்தித்துள்ளார். ஆளுநர் கையால் வீர சக்கரா விருது பெற்ற தந்தை தியாகி பெஞ்சமின் போன்ற எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் இந்த நினைவு ஸ்தூபியில் இடம் பெற்றுள்ளது.

அது குறித்து இன்றைய தலைமுறையினர் தெரிந்திடும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்தூபிக்கு அருகில் உள்ள வாசகர் சாலையினையும் சீரமைத்து அதில் தியாகிகள் வரலாற்று நினைவு சின்னங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றார்.

The post திருச்செந்தூர் நகராட்சியில் பொழுதுபோக்கு, கலாசார நினைவாக இருந்த தியாகிகள் ஸ்தூபி, அம்பேத்கர் பூங்கா பராமரிக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Martyrs' Stupa ,Ambedkar Park ,Tiruchendur Municipality ,Avalam ,Tiruchendur ,Kamaraj ,
× RELATED பிளாஸ்டிக் இல்லா நகரமாக திருச்செந்தூரை மாற்ற ஒத்துழைக்க வேண்டும்