×
Saravana Stores

திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்

*அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய கூட்டம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில், மாடவீதி வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். அடி முடி காணாத ஜோதிப்பிழம்பாக எழுந்தருளிய சிறப்புக்குரிய இத்திருநகரில், அக்னி மலையாக அண்ணாமலையாரே எழுந்தருளியிருப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

அதன்படி, திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று காலை 9.54 மணிக்கு தொடங்கி, இன்று பகல் 12.29 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் பகல் முழுவதும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலை 5 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. தொடர்ந்து விடிய விடிய கிரிவலம் சென்று கொண்டிருந்தனர்.

கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோயில், இடுக்குப் பிள்ளையார் கோயில்களை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்நிலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதிகாலை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால், தரிசன வரிசை மாடவீதியில் காந்தி சிலை வரை சந்திப்பு வரை நீண்டிருந்தது. எனவே, சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பங்குனி உத்திர உற்சவம் தொடக்கம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்தது. ஞாயிறு அரசு விடுமுறை போன்ற காரணங்களால் நேற்று கிரிவல பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்தது. அதோடு, வெளி மாநில பக்தர்களின் வருகையும் வழக்கத்தைவிட அதிகரித்திருந்தது.

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதைெயாட்டி, திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் நேற்று செயல்பட்டன. திருவண்ணாமலை நகருக்குள் சுற்றுலா கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கவில்லை.
மேலும், வேலூர் கன்டோன்மென்ட் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள், வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து சென்னை பீச் ஸ்டேஷன் வரை சிறப்பு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

The post திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Panguni month ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Krivalam ,Mada ,Veedi ,Tirthalaam ,
× RELATED 2வது நாளாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்...