கொடைக்கானல், மார்ச் 25: கொடைக்கானலுக்கு குடிநீர் ஆதாரமாக 2 குடிநீர் தேக்கங்கள் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ளது. ஒன்று ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட குடி நீர்த்தேக்கம் ஆகும். மற்றொன்று திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மனோ ரத்தினம் சோலை குடிநீர் தேக்கம் ஆகும். ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட நீர்த்தேக்கத்தில் இருந்துதான் கொடைக்கானல் நகர்ப் பகுதி முழுமைக்கும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.
புதிய குடிநீர் திட்டமான கீழ் குண்டாறு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. புதிய நீர்த்தேக்கமான மனோ ரத்தினம் சோலை அணை தனது 34 அடி முழு கொள்ளளவை கொண்டு உள்ளது. பழைய நீர் தேக்கமும் முழு கொள்ளளவு உடன் நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த நீர் இருப்பு கொடைக்கானல் நகர பகுதிக்கு போதுமானதாக உள்ளது.கொடைக்கானல் குடிநீர் தேவைக்காக கீழ குண்டாறு குடிநீர் திட்டத்தில் இருந்தும் கூடுதலான தண்ணீர் வருவதால் கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள 24 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் 6,983 குடிநீர் இணைப்புகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 29 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. கடந்த சீசன் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் நடைபெற்று வந்த நிலையில் தற்போதும் இதே போல ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இதனால் கொடைக்கானல் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானலில் கோடை சீசன் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
The post கோடையில் குடிநீருக்கு சிக்கல் இல்லை பழைய குடிநீர் தேக்க அணை ‘ஃபுல்’ கொடைக்கானல் மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.