×

உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.96 லட்சம் பறிமுதல்

 

பூந்தமல்லி, மார்ச் 25: பூந்தமல்லியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.96 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, பூந்தமல்லி அருகே புதுச்சத்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. அந்த பணத்திற்கு வேனில் வந்த தனியார் நிறுவன ஊழியர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து கண்காணிப்புக் குழு அதிகாரிகள் வேனில் இருந்த ரூ.95.94 லட்சம் பறிமுதல் செய்தனர்.

பின்னர், மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் கற்பகம், கூடுதல் தேர்தல் அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பணத்தை பூந்தமல்லி கருவூலத்தில் செலுத்தினர். பணம் கொண்டு வந்த தனியார் நிறுவன ஊழியர்களிடம் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

The post உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.96 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Election Flying Squad ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!