×

பும்ரா அபார பந்துவீச்சு வீண் மும்பையை வீழ்த்தியது குஜராத்

அகமதாபாத்: மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச முடிவு செய்தார். விரித்திமான் சாஹா, கேப்டன் கில் இணைந்து குஜராத் இன்னிங்சை தொடங்கினர். சாஹா 19 ரன் (15 பந்து, 4 பவுண்டரி) விளாசி பும்ரா வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். கில் 31 ரன் (22 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து சாவ்லா சுழலில் ரோகித் வசம் பிடிபட்டார்.

அஸ்மதுல்லா 17, டேவிட் மில்லர் 12 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பொறுப்புடன் விளையாடிய சாய் சுதர்சன் 45 ரன் (39 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் திலக் வர்மா வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ராகுல் திவாதியா 22 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி கோட்ஸீ பந்துவீச்சில் நமன் திர் வசம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. விஜய் ஷங்கர் 6 ரன், ரஷித் கான் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் பும்ரா 4 ஓவரில் 14 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஜெரால்ட் கோட்ஸீ 2, பிச்யுஷ் சாவ்லா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு162 ரன் எடுத்து தோற்றது. பிரேவிச் அதிகபட்சமாக 46 ரன் (38 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். ரோகித் சர்மா 43 ரன் எடுத்தார். குஜராத் தரப்பில் அப்துல்லா ஓமர்சை, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குஜராத் 2 புள்ளிகள் பெற்றது.

The post பும்ரா அபார பந்துவீச்சு வீண் மும்பையை வீழ்த்தியது குஜராத் appeared first on Dinakaran.

Tags : Bumrah ,Gujarat ,Mumbai ,AHMEDABAD ,Hardik ,Modi Stadium ,Viridiman Saha ,Gill ,Saha ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...