×

133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல் தீவிரவாதிகள் உக்ரைனுக்கு தப்பி ஓட முயன்றனர்: ரஷ்ய அதிபர் புடின் குற்றச்சாட்டு

மாஸ்கோ: மாஸ்கோ இசை கச்சேரி அரங்கில் துப்பாக்கிசூடு நடத்திய தீவிரவாதிகள் 4 பேர் உக்ரைனுக்கு தப்பி ஓட முயன்ற போது கைது செய்யப்பட்டனர் என்று ரஷ்ய அதிபர் புடின் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் அரங்கத்தில் இருந்தவர்கள் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியதில் 133 பேர் உயிரிழந்தனர். 153 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு அதிபர் புடின் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 பேரை ரஷ்யா கைது செய்துள்ளது. இந்நிலையில், துப்பாக்கிசூடு சம்பவத்திற்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக ரஷ்யா எதுவும் தெரிவிக்கவில்லை.ஆனால், புடின் கூறும்போது,‘‘ துப்பாக்கிசூடு சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் உக்ரைன் எல்லை வழியாக தப்பி செல்ல முயன்றபோது பிடிபட்டனர்’’ என்றார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர்,‘‘ இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்தான் காரணம். உக்ரைனுக்கு தொடர்பு இல்லை’’ என்றார். உக்ரைன் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவதற்காக தங்கள் நாட்டை புடினும் ரஷ்ய, அரசியல்வாதிகளும் தவறாக தொடர்புபடுத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய செய்தி நிறுவனங்கள் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவர்கள் தஜிகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தன. முன்னாள் சோவியத் குடியரசு நாடான தஜிகிஸ்தானில் பெரும்பான்மை இனம் முஸ்லிம்கள் ஆவர். ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டி இது அமைந்துள்ளது.

The post 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல் தீவிரவாதிகள் உக்ரைனுக்கு தப்பி ஓட முயன்றனர்: ரஷ்ய அதிபர் புடின் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Moscow ,Ukraine ,President Putin ,President ,Putin ,Crocus City ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...