×

பும்ரா அபார பந்துவீச்சு மும்பை அணிக்கு 169 ரன் இலக்கு

அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 169 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். விரித்திமான் சாஹா, கேப்டன் ஷுப்மன் கில் இணைந்து குஜராத் இன்னிங்சை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்தனர்.

சாஹா 19 ரன் (15 பந்து, 4 பவுண்டரி) விளாசி பும்ரா வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து கில் – சாய் சுதர்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 33 ரன் சேர்த்தது. கில் 31 ரன் (22 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து சாவ்லா சுழலில் ரோகித் வசம் பிடிபட்டார். அஸ்மதுல்லா 17, டேவிட் மில்லர் 12 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பொறுப்புடன் விளையாடிய சாய் சுதர்சன் 45 ரன் (39 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் திலக் வர்மா வசம் பிடிபட்டார்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ராகுல் திவாதியா 22 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி கோட்ஸீ பந்துவீச்சில் நமன் திர் வசம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. விஜய் ஷங்கர் 6 ரன், ரஷித் கான் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் பும்ரா 4 ஓவரில் 14 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஜெரால்ட் கோட்ஸீ 2, பிச்யுஷ் சாவ்லா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 169 ரன் எடுதால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.

The post பும்ரா அபார பந்துவீச்சு மும்பை அணிக்கு 169 ரன் இலக்கு appeared first on Dinakaran.

Tags : Bumrah ,Mumbai ,Ahmedabad ,Mumbai Indians ,IPL league ,Gujarat Titans ,Modi Stadium ,Hardik Pandya ,
× RELATED ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான...