×

கேப்டன் சஞ்சு சாம்சன் 82* ரன் விளாசல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

ஜெய்பூர்: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் வென்றது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இணைந்து ராயல்ஸ் இன்னிங்சை தொடங்கினர். பட்லர் 11 ரன், ஜெய்ஸ்வால் 24 ரன் (12 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர்.

சஞ்சு சாம்சன் – ரியான் பராக் ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. சாம்சன் 33 பந்தில் அரை சதம் அடித்தார். பராக் 43 ரன் (29 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஷிம்ரோன் ஹெட்மயர் 5 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி கட்டத்தில் சாம்சன் – துருவ் ஜுரெல் அதிரடி காட்ட, ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது.
சாம்சன் 82 ரன் (52 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்), ஜுரெல் 20 ரன்னுடன் (12 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 2, மோஷின் கான், ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது. டி காக் 4, தேவ்தத் படிக்கல் 0, ஆயுஷ் பதோனி 1 ரன்னில் வெளியேற… லக்னோ 3.1 ஓவரில் 11 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் கேப்டன் கே.எல்.ராகுல் – தீபக் ஹூடா ஜோடி 49 ரன் சேர்த்தது. ஹூடா 26 ரன் (13 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் ஜுரெல் வசம் பிடிபட்டார்.

அடுத்து கே.எல்.ராகுல் – நிகோலஸ் பூரன் இணைந்து அதிரடியாக விளையாடி லக்னோ அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தது. பூரன் 30 பந்தில் அரை சதம் விளாசினார். ராகுல் 58 ரன் (44 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன் மட்டுமே எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் தோற்றது. பூரன் 64 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), க்ருணால் பாண்டியா 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் 2, பர்கர், அஷ்வின், சாஹல், சந்தீப் ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சாம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ராஜஸ்தான் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

The post கேப்டன் சஞ்சு சாம்சன் 82* ரன் விளாசல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Sanju Samson ,Rajasthan Royals ,Jaipur ,IPL league ,Lucknow Supergiants ,Sawai Mansingh Stadium ,Rajasthan ,
× RELATED ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி:...