×

தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விசிக 24 இடங்களில் போட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் விசிக சார்பில் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் 24 இடங்களில் போட்டியிடுவார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக சார்பில் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் வேட்பாளர்களை விசிக தலைவர் திருமாவளவன் அறிமுகம் செய்தார். பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தலையொட்டி தென்னிந்திய மாநிலங்களில் விசிக போட்டியிடுகிறது. ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தெலங்கானாவில் செகந்திராபாத், வாராங்கல், புவனகிரி உள்ளிட்ட 10 தொகுதிகளிலும், கர்நாடகாவில் பெங்களூரு வடக்கு, மத்தியம், கோலார் உள்ளிட்ட 6 தொகுதிகளிலும், கேரளாவில் இடுக்கி, திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட 5 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். மஹாராஷ்டிராவில் ஆல் இந்தியா பெந்தர் (All India panthers sena) அமைப்பின் நிறுவனத் தலைவர் லத்தூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடுகிறார். இவ்வாறு விசிக வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன்.

இது தேர்தல் அனுபவத்துக்கான முயற்சி. அந்தந்த மாநிலங்களில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுகிறது. கட்சி வளர்வதற்கு ஆள், பண பலத்தை விட கருத்தியல் பலம் தான் முக்கியம் என நான் நம்புகிறேன். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது உள்நோக்கம் கொண்டது. தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் மீது பாஜ அடக்குமுறையை மேற்கொள்கிறது. இரண்டு முதலமைச்சர்களை கைது செய்து சிறைப்படுத்தி இருக்கிற பாஜவில் பாசிசம் தலைவிரித்து ஆடுகிறது. பாஜ எதிர்க்கட்சிகளை அச்சுருத்தியே கூட்டணியில் சேர்க்க வைக்கிறது. தேர்தல் பத்திரம் மூலம் மிகப்பெரிய ஊழலை செய்திருக்கும் பாஜ மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக தனியே தேர்தலை சந்திக்கட்டும் என பாஜக விட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். இதன் மூலம் அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்றிருக்கிறோம் என நிரூபிக்க பாஜ திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு இடையே தான் அரசியல் இருக்க வேண்டும். பாஜ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தனிச்சின்னம் ஒதுக்கப்படும் நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு தனிச் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் அளிக்க தேர்தல் ஆணையம் தாமதம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக விசிக தலைமையத்தில், எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் மகன் முன்னாள் எம்.பி., ராமதாஸ் கவுரவ தலைவராக பதவி வகிக்கும் புதிய உழைப்பாளர் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. கட்சியின் நிறுவனத் தலைவராக எம்.பி.காந்தி உள்ளார். இக்கட்சி இந்தியா கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக அறிவித்தார்.

 

The post தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விசிக 24 இடங்களில் போட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Karnataka ,Kerala ,CHENNAI ,Vishik ,Telangana ,Maharashtra ,President ,Thirumavalavan ,VISA ,
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...