* கொரோனா காலத்திலும் பாரபட்சம், ஆர்டிஐ மூலம் அம்பலம்
மதுரை: கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 3.54 லட்சம் பேரை சொந்த ஊருக்கு அனுப்ப முழுக் கட்டணமாக தமிழ்நாடு அரசிடமிருந்து, ரூ.34.60 கோடி வரை ஒன்றிய அரசின் ரயில்வே துறை வசூல் செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் ஆர்டிஐ மூலம் வெளிவந்துள்ளது. கொரோனா காலத்தில் 2020ல் பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல ரயில்வே துறை ‘ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்’ என்ற பெயரில் பல்வேறு வழித்தடங்களில் ரயில்களை இயக்கியது.
மிக விபரமாக மாநில அரசு அதிகாரிகள் யாரைக் கொண்டு வருகிறார்களோ, அவர்களிடம் முழு கட்டணம் பெற்று, அந்த பயணிகளை மட்டுமே ரயில்களில் ஏற ரயில்வே துறை அனுமதித்தது. இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் குறித்து ஆர்டிஐ மூலம் ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பாண்டியராஜா விபரங்களை பெற்றார். அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 2020, மே 1ம் தேதி தெற்கு ரயில்வேயிலிருந்து முதல் ரயில் எர்ணாகுளத்திலிருந்து புவனேஸ்வருக்கும், கடைசி ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆக.11ம் தேதி பீகார் மாநிலத்தில் உள்ள தேனாப்பூருக்கும் இயக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து 265 ரயில்களில் மொத்தம் 3 லட்சத்துக்கு 54 ஆயிரத்து 150 பேர் பயணித்தனர். இப்பயணக் கட்டணமாக தமிழ்நாடு அரசு ரூ.34 கோடியே 60 லட்சத்து 93 ஆயிரத்து 845ஐ ஒன்றிய ரயில்வேதுறைக்கு செலுத்தியது. இந்த ஷ்ராமிக் ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் முன்பதிவின்றி வசூலிக்கப்பட்டது. சாதாரண பெட்டிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்கக் கூட ஒன்றிய ரயில்வே துறைக்கு மனமில்லை. கட்டண குறைப்போ, இலவச டிக்கெட்டோ, முதியோர் பயணகட்டண சலுகையோ தரவில்லை.
முழு கட்டணத்தையும் ரயில்வே துறை தீவிரம் காட்டி தமிழக அரசிடமிருந்து வசூலித்திருக்கிறது. தமிழகத்திலிருந்து இயக்கிய 265 சிறப்பு ரயில்களில் ஒரே ஒரு ரயிலுக்குதான் உத்ரகாண்ட் மாநிலம் பயண கட்டணத்தை செலுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்பட்ட ரயில்களில் பெருந்தன்மையுடன் ஒரு ரயிலை தவிர அனைத்து ரயில்களுக்கும் கட்டணத்தை வந்தாரை வாழவைக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
பிற மாநிலங்களில் மாநிலவாரியான பயணிகள் பட்டியல் தயாரித்து, அந்தந்த மாநிலங்களிடம் கட்டணம் பெற்று அதன்பிறகே ரயில்கள் தயார் செய்து கட்டணம் பெறப்பட்டவர்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆனால் ஒன்றிய அரசின் ரயில்வே துறை கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்திய நிலையில், தமிழக அரசு பெருந்தன்மையுடனும், மனிதாபிமானத்துடனும் இந்த கட்டணத்தை தானே செலுத்தி அனுப்பி வைத்தது.
* சிறப்பு ரயில்கள் விபரம்
தமிழகத்திலிருந்து இயக்கப்பட்ட 265 சிறப்பு ரயில்கள் விபரம் வருமாறு: சென்னை சென்ட்ரல்-77, திருப்பூர்-34, கோவை-34, திருவள்ளூர்- 22, சென்னை எழும்பூர்-15, மதுரை-11, ஈரோடு-10, காட்பாடி-9, செங்கல்பட்டு-8, சேலம்-6, திருச்சி-6, திருநெல்வேலி-5, தஞ்சாவூர்-4, கன்னியாகுமரி, நாகர்கோவில், மேட்டுபாளையத்தில் இருந்து தலா 3 ரயில்கள், தூத்துக்குடி, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் இருந்து தலா 2 ரயில்கள், நாமக்கல், விழுப்புரம், விருதுநகர், அரக்கோணம், ஜோலார்பேட்டையில் இருந்து தலா 1 ரயில்கள் இயக்கப்பட்டன.
The post வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப முழு ரயில் கட்டணம் ரூ.34.60 கோடியை தமிழக அரசிடம் வசூலித்த ஒன்றிய அரசு appeared first on Dinakaran.