×

பாஜவை கருத்தில் கொள்ள மாட்டார்கள் தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி: கனிமொழி எம்பி பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தான் போட்டி என கனிமொழி எம்பி கூறினார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி நேற்று காலை 10:30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டு சென்றார். அப்போது அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடியில் நிச்சயமாக திமுக வெற்றி பெறும். தூத்துக்குடி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக, இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். நான் எனது தூத்துக்குடி தொகுதியில் மட்டும் இல்லாமல், மேலும் 10 அல்லது 12 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறேன். சென்னை தொகுதிகளிலும் பிரசாரம் செய்வது பற்றி திட்டம் உள்ளது.

தமிழ்நாட்டில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தான் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் நிச்சயமாக பாஜவை தமிழக மக்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள். அண்ணாமலை சவால் விட்டுக் கொண்டிருக்கட்டும். தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போது பார்த்துக் கொள்ளட்டும். தமிழ்நாடு முன்னேறிய மாநிலங்களில் முக்கியமான ஒரு மாநிலமாக இருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்துறை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அதற்குக் காரணம், திராவிட இயக்கங்களின் கருத்துக்களை உள்வாங்கிய ஆட்சி நடப்பதால்தான் என்றார்.

 

The post பாஜவை கருத்தில் கொள்ள மாட்டார்கள் தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி: கனிமொழி எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,DMK ,AIADMK ,Kanimozhi ,Chennai ,Deputy General Secretary ,Kanimozhi MP ,Thoothukudi ,Indigo Airlines ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...