×

டெல்லியின் முதல்வர் என்ற அடிப்படையில் ‘ஈடி’ கஸ்டடியில் இருந்து முதல் உத்தரவு பிறப்பித்த கெஜ்ரிவால்: அமைச்சர் அதிஷிக்கு அனுப்பிய கடிதத்தில் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியின் முதல்வர் என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை கஸ்டடியில் இருந்து கொண்டு முதன் முறையாக உத்தரவு ஒன்றை கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் அதிஷிக்கு பரபரப்பு கடிதம் அனுப்பி உள்ளார். டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது அமலாக்கத்துறை கஸ்டடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை வரும் 29ம் தேதி வரை அமலாக்கத்துறையின் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், அமலாக்கத்துறையின் கஸ்டடியில் இருந்து கொண்டே, டெல்லி அரசின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷிக்கு உத்தரவு ஒன்றை அனுப்பி உள்ளார். அமலாக்கத்துறை காவலில் இருந்து கொண்டு, டெல்லி முதல்வராக தொடர்ந்து கெஜ்ரிவாலால் பணியாற்ற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், முதன் முறையாக அவர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி அமைச்சர் அதிஷி கூறுகையில், ‘முதல்வர் கெஜ்ரிவாலின் உத்தரவு குறிப்பைப் படித்து பார்த்துவிட்டு கண்ணீர் விட்டேன். சிறையில் இருக்கும் இவர் யார்? என்று எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன்.

டெல்லியில் வசிக்கும் 2 கோடி மக்களை தங்களது குடும்ப உறுப்பினராக கருதுவதால், அவர் மக்களுக்கான குடிநீர் பிரச்னை குறித்து அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘டெல்லியின் சில பகுதிகளில் குடிநீர் மற்றும் சாக்கடை கால்வாய் பிரச்னைகள் உள்ளதை அறிந்தேன். இதைப் பற்றி கவலைப்படுகிறேன். நான் இங்கு இருப்பதால் மக்கள் எந்தப் பிரச்னையையும் சந்திக்கக் கூடாது. கோடை காலம் வந்துவிட்டது.

எனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் போதுமான டேங்கர்களை அனுப்பிவைத்து தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும். மக்கள் சிரமப்படாமல் இருக்க தலைமைச் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்குங்கள். தேவைப்பட்டால் துணை நிலை ஆளுநர் உங்களுக்கு உதவுவார்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பாஜகவிற்கு ஒன்றை சொல்லிக் கொள்ளள விரும்புகிறேன், நீங்கள் அவரை கைது செய்து சிறையில் அடைக்கலாம். ஆனால் டெல்லி மக்கள் மீதான அவரது அன்பையும், கடமை உணர்வையும் உங்களால் சிறையில் அடைக்க முடியாது. அவர் சிறையில் இருப்பதால், மக்களுக்கான பணிகள் தடைபடாது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் கூட, அவர் டெல்லி மக்களைப் பற்றியே சிந்திக்கிறார்’ என்று கூறினார்.

வீட்டுக்காவலில் வைக்க திட்டமா?
ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘அமலாக்கத் துறையின் கஸ்டடியில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், தான் ஒரு முதல்வர் என்ற அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பிக்கலாம். ஆனால் சிறைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டால், அவ்வாறு செய்ய முடியாது. ஒரு கைதி என்ற அடிப்படையில், அவர் சிறைத்துறையின் அனுமதியின்றி எந்த உத்தரவுகளையும் செய்ய முடியாது. கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாதது குறித்து உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. அவர் ஒரு பொது ஊழியர் என்பதால், அவரை ஒன்றிய அரசு இடைநீக்கம் செய்ய வேண்டும் அல்லது பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும்.

ெபாது ஊழியருக்கான விதிமுறைகள் அதுதான். இருப்பினும், மற்றொரு வழி ஒன்று உள்ளது. அவரை வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கெஜ்ரிவால் முதல்வராக தனது பணியை தொடரலாம். இருப்பினும், இதற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவின் ஒப்புதல் தேவை. ஒருவேளை அவர் அனுமதி அளிக்கும்பட்சத்தில், நீதிமன்ற வளாகத்தை தற்காலிக சிறையாக மாற்ற முடியும். அங்கிருந்து அவர் தனது பணிகளை மேற்கொள்ள முடியும். இதற்கெல்லாம் துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் இருந்து உத்தரவு கிடைத்தால் மட்டுமே சாத்தியமாகும். இல்லாவிட்டால் சாத்தியமில்லை’ என்றனர்.

The post டெல்லியின் முதல்வர் என்ற அடிப்படையில் ‘ஈடி’ கஸ்டடியில் இருந்து முதல் உத்தரவு பிறப்பித்த கெஜ்ரிவால்: அமைச்சர் அதிஷிக்கு அனுப்பிய கடிதத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,ED ,Chief of ,Delhi ,Minister ,Adashi ,NEW DELHI ,Adishi ,Delhi government ,Chief Minister of ,Dinakaran ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...