×

வனப்பகுதியில் மழை குறைவு; வறண்டு வரும் நீரோடைகள்: விலங்குகள் இடம்பெயர்வு; வனத்துறை கண்காணிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால், அங்குள்ள நீரோடைகளில் தண்ணீர் இன்றி வறண்டு வருகிறது. இதனால், விலங்ககுள் இடம்பெயர்வதை வனத்துறையினர் கண்காணிக்கின்றனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் கடந்த ஆண்டில் பருவமழை சில மாதங்கள் பெய்தது. அவ்வப்போது பெய்த பருவமழையால் வனப்பகுதியில் உள்ள அருவி, நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகளவு இருந்தது. இதனால் அந்நேரத்தில் வனப்பகுதியில் ஆங்காங்கே புதிதாக சிற்றருவிகள் உருவானது.

இதில் கவியருவியிலும், அருகே உள்ள நவமலை நீரோடையிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. ஆனால் அங்கு தண்ணீர் கொட்டுவது கடந்த ஜனவரி மாதம் வரையிலே ஓரளவு இருந்தது. அதன்பின் மழை இல்லாததால், கவியருவி மற்றும் நீரோடைகளில் குறைந்த அளவே தண்ணீர் வரத்து இருந்தது. பின்னர் கடந்த பிப்ரவரி துவக்கத்திலிருந்து கவியருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நவமலை உள்ளிட்ட நீரோடையில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருந்ததால் பெரும்பகுதி வெறும் பாறையானது.

பொள்ளாச்சி வனச்சரகத்தில் எப்போதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கும், ஆழியார் அருகே உள்ள நவமலை நீரோடையில் தற்போது தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று போனது. இதனால் அப்பகுதி வறண்ட இடமாக காணப்படுகிறது. வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் இல்லாமல் உள்ளதால், அடர்ந்த வனத்திலிருந்து விலங்குகள் பல, நீர்நிலைகளை தேடி வருவது தொடர் கதையாக உள்ளது. இருப்பினும், அடர்ந்த வனத்திலிருந்து இடம்பெயரும் விலங்ககுகளை கண்காணிக்கும் பிணியில் தொடர்ந்து ஈடுபடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post வனப்பகுதியில் மழை குறைவு; வறண்டு வரும் நீரோடைகள்: விலங்குகள் இடம்பெயர்வு; வனத்துறை கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...