×

தொண்டாமுத்தூர் அருகே அரசு பழங்குடியினர் பள்ளி சுவர்களில் தூரிகை அறக்கட்டளை வண்ண ஓவியம்

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் அருகே அரசு பழங்குடியினர் பள்ளியில் குழந்தைகள் படிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் சுவர்களில் சுற்றுச்சூழலை காக்கும் விழிப்புணர்வு வண்ண ஓவியங்கள், தூரிகை அறக்கட்டளை சார்பில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. கோவை ஓவிய தம்பதி முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு குவிந்து வருகிறது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகில் சாடிவயல் கிராமத்தில் சீங்குபதி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பறை ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதனால் இதனை கருத்தில் கொண்டு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) புனித அந்தோணியம்மாள் வழிகாட்டுதலின் படி கோவை தூரிகை அறக்கட்டளை நிறுவனர் ரஞ்சித் சாமுவேல் மற்றும் அவரது மனைவி ஸ்நேகா சாமுவேல் ஆகியோர் இணைந்து காக்னிசன்ட் அவுட்ரீச் தன்னார்வலர்கள் பள்ளியின் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையில், தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த ஓவியங்களை வரைந்துள்ளனர்.மேலும் மற்றொரு வகுப்பறையில் மாணவர்கள் கற்பதற்கு தேவையான படங்கள் என கண்கவர் வண்ணமயமான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

இது இந்த தம்பதியர் இணைந்து நடத்தும் தூரிகை அறக்கட்டளையின் பொது சேவை அடிப்படையில் மேற்கொண்ட 35-வது ஓவியப்பணி என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வமுடன் வருகை புரிவதனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியின் வெளிப்புற சுவர்களிலும் பறவைகள், விலங்குகள் இடம் பெறும் இயற்கை சூழலினை ஓவியங்களின் மூலம் தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர். பள்ளியின் சமையலறையின் வெளிப்புற சுவற்றில் உணவு மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை எளிதில் புரிந்து கெள்ளும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இதன் மூலம் பழங்குடியினத்தை சேர்ந்த இருளர் குல மாணவர்கள் 30 பேர் வண்ண மயமான வகுப்பறையில் கல்வி கற்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளியில் பணி புரிந்து வரும் தலைமையாசிரியர் உமா வாணி, இடைநிலை ஆசிரியர் பேபி தங்கம் இருவரின் முயற்சியால் மாணவர்களின் கற்றல் மற்றும் தனித்திறன் மேம்பட பல வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய பள்ளி தலைமையாசிரியர் உமா வாணி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் ஓவியர் தம்பதியர் முயற்சிக்கு அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் இடையே பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

The post தொண்டாமுத்தூர் அருகே அரசு பழங்குடியினர் பள்ளி சுவர்களில் தூரிகை அறக்கட்டளை வண்ண ஓவியம் appeared first on Dinakaran.

Tags : Brush Foundation ,Government Tribal School ,Thondamuthur ,Coimbatore ,Dinakaran ,
× RELATED அமோக வெற்றியை தந்த தேக்கு மிளகு கூட்டணி: சாதித்த பெண் விவசாயி நாகரத்தினம்!