×

மர்ம பொருள் வெடித்து மாணவன் உயிரிழந்த விவகாரம் அடுத்தடுத்து கெமிக்கல் வெடித்ததால் சேதமடைந்த வீடு முழுவதும் இடிப்பு

 

மாதவரம், மார்ச் 24: கொளத்தூரில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவன், மர்ம பொருள் வெடித்ததால் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து தொடர்ந்து கெமிக்கல் வெடித்ததால், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, அந்த வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். கொளத்தூர் முருகன் நகர் 2வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (49). இவரது மனைவி சிவப்பிரியா கொரோனா காலத்தில் இறந்துவிட்டார். இவரது ஒரே மகன் ஆதித்ய பிரணவ் (17), முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

சிறு வயது முதல் அறிவியல் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் கொண்ட இவர், கடந்த வியாழக்கிழமை மதியம் 2.30 மணிக்கு, வீட்டில் யாரும் இல்லாதபோது, சில கெமிக்கல்களை வைத்து புதிய கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சி செய்துள்ளார். அப்போது பலத்த சத்தத்துடன் கெமிக்கல் வெடித்ததால், மாணவன் ஆதித்ய பிரணவ் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். அவரது கை, 2 கட்டிடங்களை தாண்டி விழுந்து கிடந்தது. இந்த விபத்தில், அப்பகுதியில் உள்ள 10 வீடுகள் சேதமடைந்தன.

இதில், 4 வீடுகள் கடுமையான சேதமடைந்தன. தகவறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், இடிபாடுகளை அகற்றி மாணவன் ஆதித்ய பிரணவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பினர். மேலும், மாணவன் ஆராய்ச்சிக்காக என்ன கெமிக்கல்களை பயன்படுத்தினார். அவருக்கு கெமிக்கல்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த மறுநாள் மீண்டும் அந்த வீட்டிலிருந்து 2 முறை லேசான வெடி சத்தம் கேட்டுள்ளது. எஞ்சியுள்ள கெமிக்கல்கள் அவ்வப்போது வெடித்துள்ளன. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு கொளத்தூர் போலீசார் அந்த வீட்டை ஆட்களை கொண்டு சுத்தம் செய்துள்ளனர். அப்போது மீண்டும் பலத்த சத்தத்துடன் அந்த வீட்டில் இருந்த கெமிக்கல் வெடித்துள்ளது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் உதவி கமிஷனர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், இதுகுறித்து தடய அறிவியல் உதவி இயக்குனர் அன்வர் சித்திக் என்பவரை தொடர்பு கொண்டு தொடர்ந்து விபத்து நடந்த வீட்டில் ஏற்படும் வெடி சத்தம் குறித்து கூறியுள்ளார்.

அவரது ஆலோசனையின் பேரில் மேற்கண்ட இடத்தில் அதிக அளவு தண்ணீர் நிரப்ப அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த வீட்டில் இருந்து மர்ம பொருள் வெடிப்பதாக அச்சம் தெரிவித்ததால், மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த வீட்டை முழுவதுமாக இடித்தனர். மேலும், கட்டிட கழிவுகளை இரவோடு, இரவாக அப்புறப்படுத்தினர். இதன் மூலம் 3 நாட்களாக நீடித்த பிரச்னைக்கு போலீசார் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

The post மர்ம பொருள் வெடித்து மாணவன் உயிரிழந்த விவகாரம் அடுத்தடுத்து கெமிக்கல் வெடித்ததால் சேதமடைந்த வீடு முழுவதும் இடிப்பு appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Kolathur ,Dinakaran ,
× RELATED புழலில் பயன்பாடில்லாத வருவாய்த்துறை...