×

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திருமயம், மார்ச் 24: திருமயம் அருகே 63ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் 24 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பரளி கிராமத்தில் 63ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 24 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, சிறிய மாடு என பந்தயம் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. முதலாவதாக நடத்தப்பட்ட பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில் முதல் பரிசை திருமயம் வளையல்வயல் அறிவு, 2ம் பரிசு கோனாபட்டு கொப்புடையம்மன், 3ம் பரிசு தஞ்சை திருப்பந்துருத்தி அமர்சிங், 4ம் பரிசு பரளி யஸ்வந்த் சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 16 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை கேகே பட்டி பொன்னையா கண்ணன், 2ம் பரிசு மணப்பட்டி புலிப்பாண்டி, 3ம் பரிசு கொள்ளக்காட்டுப்பட்டி முருகேசன், 4ம் பரிசு பரளி கார்த்திக் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன. பந்தயம் நடைபெற்ற மலைக்குடிப்பட்டி – திருப்பத்தூர் பைபாஸ் சாலை பகுதியில் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்திற்கான ஏற்பாடுகளை பரளி இளைஞர் சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post மாட்டு வண்டி எல்கை பந்தயம் appeared first on Dinakaran.

Tags : Bullock Cart Elkai Race ,Thirumayam ,annual festival ,Parali village ,Tirumayam, Pudukottai district ,
× RELATED அறந்தாங்கி அடுத்த பிராமணவயல் கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்