×

வங்கதேசம் எல்லையை கடக்க முயன்ற சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கைது

சென்னை: வங்கதேசம் எல்லையை கடக்க முயன்ற சேலையூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர், அமெரிக்க டாலருடன், ராணுவத்தினர் கைது செய்தனர். இதுகுறித்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் செல்வராஜ் (47). இவர், 1993ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு மனைவி, 1 மகன், 1 மகள் உள்ளனர். இவரது மனைவி, திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மகன் மற்றும் மகள் திருச்சியிலேயே படித்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் காவல் துறையில் பணியாற்றியபோது, ஜான் செல்வராஜ் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால் காவல் துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து 10 ஆண்டுகளாக பணியில் இல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து, மீண்டும் காவல்துறையில் சேர்ந்த அவர், சென்னையில் 10 ஆண்டுகளாக கானத்தூர், பல்லாவரம் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது மடிப்பாக்கத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி, சேலையூர் காவல் நிலையத்தில் கடந்த 6 ஆண்டுகளாக சிறப்பு உதவி ஆய்வாளராக பணியில் இருந்துக்கொண்டு, நீதிமன்ற பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில், 2 நாட்கள் விடுமுறை என சேலையூர் காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு சென்ற ஜான் செல்வராஜ், பின்னர் 15 நாட்கள் மருத்துவ விடுப்பு வேண்டும் என கடிதம் கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், வங்கதேசம் எல்லையில் சட்ட விரோதமாக கடக்க முயற்சித்ததாக ஜான் செல்வராஜை, வங்கதேச ராணுவத்தினர் கைது செய்து, அவரிடமிருந்து 7500 அமெரிக்க டாலர்கள், இந்திய பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர், வங்கதேச ராணுவ தலைமையகத்தில் இருந்து, தமிழ்நாடு காவல்துறை தலைமையகத்திற்கு தொடர்புகொண்டு இத் தகவலை தெரிவித்தனர். காவல்துறை உயர் அதிகாரிகள், ஜான் செல்வராஜ் எதற்காக வங்கதேசம் சென்றார் என விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, திருச்சி மாவட்டத்தில் காவல்துறையில் பணியில் இருந்தபோது, சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ஜான் செல்வராஜ், யார் யாருடன் தொடர்பில் இருந்தார்? அமெரிக்க டாலர்கள் மற்றும் இந்திய பணத்துடன் வங்கதேசம் சென்றது எதற்காக, போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வங்கதேசம் எல்லையை கடக்க முயன்ற சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Selaiyur Police ,Assistant Inspector ,Bangladesh ,CHENNAI ,Inspector ,Selaiyur Police Station ,US ,Tambaram Police Commissionerate ,John Selvaraj ,Trichy ,Assistant ,Dinakaran ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது