சென்னை: இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்படுவதாக மார்ச் 17ம் தேதி மியூசிக் அகாடமி அறிவித்தது.இதற்கு சில கர்நாடக இசைக் கலைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, பிரபல கர்நாடக பாடகிகள் ரஞ்சனி, காயத்ரி ஆகியோர், மியூசிக் அகாடமிக்கு எழுதிய கடிதத்தை தங்கள் முகநூலில் வெளியிட்டனர். இது கர்நாடக இசை உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ‘சபாக்களில் பிராமண ஆதிக்கம் இருக்கிறது. அதை களைய வேண்டும். சாஸ்திரீய சங்கீதத்தை வெகுஜனத்துக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்’ என டி.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார்.
இதனால் கொதிப்படைந்த ஒரு சில கர்நாடக இசைக் கலைஞர்கள் அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். ‘கிருஷ்ணாவுக்கு விருது கொடுப்பது இசை உலகத்துக்கு அவமானம்’ என முகநூலில் ரஞ்சனி, காயத்ரி கூறியுள்ளனர். இந்நிலையில், ரஞ்சனி, காயத்ரியின் கடிதம் கிட்டத்தட்ட அவதூறு என்று சொல்லத்தக்க வகையில் இருந்ததாகவும் மூத்த, சக இசைக் கலைஞர் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டு, மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி பதில் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மியூசிக் அகாடமியின் நிர்வாகக் குழு இந்த ஆண்டு இந்த விருதுக்கு டி.எம். கிருஷ்ணாவைத் தேர்வு செய்தது.
நீண்ட காலமாக இசையுலகில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டதே தவிர, வேறு புறக் காரணிகள் எங்கள் தேர்வின் மீது தாக்கம் செலுத்தவில்லை. உங்களுக்குப் பிடிக்காத இசைக் கலைஞர் ஒருவருக்கு விருது அளிக்கப்படுகிறது என்பதால், இந்த ஆண்டு விழாவிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்திருப்பதும் மோசமாக விமர்சிப்பதும் கலைஞர்களுக்கு உரிய பண்பல்ல. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட கடிதத்தை நீங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள். இது மரியாதைக் குறைவானது என்பதோடு உங்கள் கடிதத்தின் நோக்கம் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.
The post டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது: எதிர்ப்பு காட்டும் பாடகிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் appeared first on Dinakaran.