×

வடமாநில நபர்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய மத்திய சென்னை பாஜ வேட்பாளர்

பெரம்பூர்: வடமாநில நபர்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழர்களை இழிவுபடுத்தி பேசியதோடு, 500 ரூபாய் கொடுத்தால் ஓட்டு போட தமிழர்கள் லைனில் நிற்பார்கள் என்று பாஜ மத்திய சென்னை வேட்பாளர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மேடைக்கு மேடை பாரதம் ஒன்றுபட்டு திகழ்கிறது, பாரத் மாத்தா கி ஜே என முழங்கும் பாஜவினர், தேர்தல் நேரங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் கூட்டணி அமைத்து பொதுமக்களின் ஓட்டுகளை பெற வியூகம் அமைத்து வருகின்றனர். ஏற்கனவே பாஜ அரசு மதரீதியாக மக்களை பிரித்து ஆள்கிறது என பொதுமக்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு ஜாதி கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்து பொதுமக்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜவின் மத்திய சென்னை வேட்பாளரின் பேச்சு தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜவில் மத்திய சென்னை வேட்பாளராக வினோஜ் பி.செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக நின்று படுதோல்வி அடைந்தார். மீண்டும் பாஜ மேலிடம், மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

பாஜ தலைவர் அண்ணாமலைக்கு வினோஜ் பி.செல்வம் நெருக்கமாக உள்ளதாலும் பல்வேறு செலவினங்களை அவர் செய்து வருவதாலும் அண்ணாமலை சிபாரிசின்பேரில் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாக பாஜவினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வினோத் பி.செல்வம், சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கேஎல்பி அடுக்குமாடி குடியிருப்புக்கு வருகை தந்தார். அங்கு வசிக்கும் வடமாநிலத்தவர்களுடன் வினோஜ் பி.செல்வம் பேச அடுக்குமாடி குடியிருப்பு நல சங்க செயலாளர் ஏற்பாடு செய்திருந்தார்.

இங்கு வசிக்கும் அனைவரும் சென்னை சவுகார்பேட்டையில் சொந்தமாக தொழில் செய்து வருகின்றனர். புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி புளியந்தோப்பு பகுதிக்கு வந்துவிட்ட போதிலும் பெரும்பாலானோர் ஓட்டுரிமை மத்திய சென்னை பகுதியான துறைமுகத்தில் உள்ளது. இதனால் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவை பெறுவதற்காக வினோஜ் பி.செல்வம் வருகை தந்தார்.அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில்தான் குறைவாக ஓட்டு சதவீதம் உள்ளது. 14 லட்சம் ஓட்டுகள் இருந்தும் வாக்காளர்கள் முறையாக ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று ஓட்டு போடுவதில்லை. குறிப்பாக, தேர்தல் என்றால் உங்களை போன்றவர்கள் (வடமாநில நபர்கள்) வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாள் லீவு என நினைத்து ‘வெக்கேஷன்’ கிளம்பி விடுகின்றனர். ஆனால், இங்குள்ள நபர்கள் (தமிழர்கள்) 500 ரூபாய் வாங்கி கொண்டு நேராக ஓட்டு சாவடிக்கு சென்று சரியாக ஓட்டு போடுகின்றனர்.

இதனால்தான் தொடர்ந்து ஒரு சிலர் வெற்றி பெற்று வருகின்றனர். இங்குள்ள ஒவ்வொருவரும் (வட மாநில நபர்கள்) ஓட்டு சாவடிக்கு செல்லவேண்டும். ஓட்டு சாவடிக்கு சென்று விட்டால் கண்டிப்பாக பாஜவுக்கு தான் ஓட்டு போடுவார்கள். எனவே, ஒவ்வொருவரும் தேர்தலுக்கு முந்தையநாள் செல்போனில் குறைந்தபட்சம் 20 பேருக்காவது போன் செய்து ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டு போடுங்கள் என கூறவேண்டும். இதன் மூலம் நாம் எளிதில் வென்றுவிடலாம். இதனை அனைவரும் செய்யவேண்டும். அனைவரையும் தனித்தனியாக சந்தித்து ஓட்டு போடுங்கள் என கூற முடியாது. மோடிஜி ஒரே மாதத்தில் 8 முறை தமிழ்நாடுக்கு வந்துள்ளார்.

அதை நீங்கள் மறந்து விடக்கூடாது” என பேசியுள்ளார். இரவு 9 மணிக்கு தொடங்கி 10 மணியை தாண்டி இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்நிலையில் வினோஜ் பி.செல்வம் பேசிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வடமாநில நபர்களிடம் தமிழர்களை பற்றி தரக்குறைவாக பேசியதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழர்களிடம் 500 ரூபாய் கொடுத்தால் லைனில் சென்று சரியாக ஓட்டு போடுவார்கள். ஆனால் வடமாநில நபர்கள் அதாவது மார்வாடிகள் ஓட்டு போடுவதற்கு செல்வதில்லை. இதனால் தான் தமிழகத்தில் பாஜ வெற்றிபெற முடிவதில்லை என்ற ரீதியில் வினோஜ் பி.செல்வம் பேசியுள்ளார் என நெட்டிசன்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வடமாநில நபர்களின் ஓட்டுகளை மட்டும் வைத்து கொண்டு வினோஜ் பி.செல்வம் வெற்றி பெற்றுவிட முடியுமா? அவர்களிடம் தமிழர்களை பற்றி 500 ரூபாய் வாங்கி கொண்டு ஓட்டு போடுவார்கள் என கேவலமாக பேசுவது எந்த வகையில் நியாயம் என பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் 72வது வார்டு மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சரவணன் நேற்று குறிப்பிட்ட இந்த வீடியோ ஆதாரங்களை திருவிக நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி மகாலட்சுமியிடம் புகாராக கொடுத்துள்ளார். புகாரை பெற்ற தேர்தல் நடத்தும் அதிகாரி மேற்கண்ட புகாரை புளியந்தோப்பு உதவி கமிஷனர் ராஜாவுக்கு மாற்றி இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கூறியுள்ளார். தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வடமாநில நபர்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய மத்திய சென்னை பாஜ வேட்பாளர் appeared first on Dinakaran.

Tags : Madhya Chennai Baja ,Tamils ,Northern State ,Perampur ,North State ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!