×

டெல்லி முதல்வர் கைது கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம்

*ஆம் ஆத்மி கட்சியினர் கைது

புதுச்சேரி : ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை நேற்று முன்தினம் இரவு கைது செய்தது. இதனை கண்டித்து புதுச்சேரி ஆம் ஆத்மி மாநில செயலாளர் ஆளடி கணேசன் தலைமையில் காமராஜர் சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. தகவலறிந்த உருளையன்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்யநாராயணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிறகு சாலை மறியலை கைவிட்டு அருகில் ஒரு கடையின் மீது இருந்த செல்போன் டவர் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் நீண்ட நேரம் கழித்து அவர்கள் செல்போன் டவரில் இருந்து இறங்கி போடாதே போடாதே பொய் வழக்கு போடாதே, அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனிடையே கடையின் உரிமையாளர் யாரை கேட்டு எங்கள் கடையின் மீது ஏறினீர்கள் என்று கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு கடையின் உரிமையாளர் மாடிக்கு செல்லும் வழியின் இரும்பு கதவை பூட்டிவிட்டார்.

இதனால் போராட்டக்காரர்கள் கீழே வரமுடியாமல் தவித்தனர். பின்னர் போலீசார் கடையின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் கதவை திறந்துவிட்டார். இதையடுத்து போராட்டக்காரர்கள் கீழே வந்து கோஷங்களை எழுப்பினர். பிறகு உருளையன்பேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி கட்சியினரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

The post டெல்லி முதல்வர் கைது கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Aam Aadmi Party ,Puducherry ,Enforcement Directorate ,Arvind Kejriwal ,State Secretary ,Aaladi Ganesan ,
× RELATED ஆம்ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் கெஜ்ரிவால் மனைவி பிரசாரம்