×

ஆகாயத்தாமரையை அகற்றி ஏரியை தூர்வார வேண்டும்

*விவசாயிகள் கோரிக்கை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பேரூராட்சி ஏரியில் மண்டியுள்ள ஆகாயத்தாமரை, சீமைக் கருவேல மரங்களை அகற்றி, துார் வாரிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி பேரூராட்சியில் 300 ஏக்கர் பரப்பளவில், 2 கலுங்கல் மற்றும் 5 மதகுகளை கொண்ட பெரிய ஏரி, தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.இந்த ஏரியின் நடுவே நான்குவழிச் சாலை செல்கிறது. விக்கிரவாண்டி கிழக்கு, மேற்கு பகுதிகளில் உள்ள இந்த ஏரி, பெரிய ஏரி, சிறிய ஏரி, அரண்டேரி என அழைக்கப்படுகிறது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி மூலம் 850 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், தற்போது இதில் ஆகாயத்தாமரை செடிகள், சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் போதிய அளவு தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. இதனால் விவசாயிகள் 300 ஏக்கர் அளவிற்கு தான் ஏரி பாசனத்தை நம்பி நெற்பயிர் சாகுபடி செய்கின்றனர். அதுவும் ஒரு போகம் மட்டுமே பாசன வசதி பெற முடிகிறது.

ஏரிகளை பராமரிக்கும் விதமாக கடந்த 2007ம் ஆண்டில் நீர்வள, நிலவள திட்டம்-1 கொண்டுவந்த போது ஏரியை சீரமைத்தனர். அதன் பிறகு 2008 முதல் 2010ம் ஆண்டு வரை விக்கிரவாண்டி ஏரியின் நடுவே நான்குவழிச் சாலை அமைக்க ஏரியில் திட்டுத் திட்டாக மண் எடுத்ததால் பல இடங்களில் பள்ளம் எற்பட்டது. இதனால் நீர் தேக்கி வைக்க முடியாமல் போனது. தொடர்ந்து 2012ம் ஆண்டு நீர்வள, நிலவள திட்டம்-2 மூலம் ஏரி பாசன வாய்க்கால்களை பொதுப்பணித் துறையினர், ஆழப்படுத்தி 30 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் வாய்க்கால் அமைத்தனர்.

அதன் பிறகு அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு இல்லாத காரணத்தினால் சுற்றுப்புறங்களில் குடியிருப்போர் குப்பைகளை ஏரியில் கொட்டியும், சில இடங்களில் கழிவுநீரையும் கலக்கச் செய்கின்றனர். இதனால் ஏரி முழுமையாக மாசு அடைந்து நீண்ட காலமாக பராமரிப்பு பணிகளே நடைபெறாமல் உள்ளது. தமிழக அரசு, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஏரியில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகள், சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றி ஏரிக்கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் கோடை காலத்தில் இப்பணிகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தனி கவனம் செலுத்தி செய்தால் மழைக்காலத்தில் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அத்துடன் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து, விக்கிரவாண்டி பகுதி மக்களின் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையும் நீங்கும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஆகாயத்தாமரையை அகற்றி ஏரியை தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Vikriwandi ,Akayathamar ,Seimai Karuvala ,Mandi ,Wikriwandi Peruradasi Lake ,Dur ,Wickravandi district ,Kangal ,Dinakaran ,
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...