×

தூத்துக்குடியில் 6 விசைப்படகுகளுடன் 86 பேர் சிறை பிடிப்பு குளச்சல் மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம்

*மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

குளச்சல் : குளச்சலை சேர்ந்த 6 விசைப்படகுகளுடன் 86 மீனவர்கள் தூத்துக்குடியில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம் கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. கடந்த வாரம் விசைப்படகுகள் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து வழக்கம் போல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றன. கடந்த 19ம் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாக குளச்சல் 5 விசைப்படகுகளில் இருந்த 73 மீனவர்களையும் மற்றும் ஒரு கேரள விசைப்படகையும், அதிலிருந்த 13 மீனவர்களையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைப்பிடித்து தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

தகவலறிந்த குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் (குளச்சல்) நிர்வாகிகள் விரைந்து தூத்துக்குடி சென்றனர். அங்கு மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தூத்துக்குடி மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்படவில்லை. தொடர்ந்து 3 நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. இதற்கிடையே சிறைப்பிடிக்கப்பட்ட குளச்சல் விசைப்படகுகளை இயங்காதவாறு தூத்துக்குடி மீனவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

3 நாட்கள் ஆகியும் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள், விசைப்படகுகள் விடுவிக்காததை கண்டித்து நேற்று குளச்சல் விசைப்படகினர் மற்றும் பைபர் வள்ளம், கட்டுமர மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். மீன் பிடிக்க செல்லாத விசைப்படகுகள் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகளிலிருந்து மீன்கள் இறக்கப்பட வில்லை. வியாபாரமும் நடக்கவில்லை.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் குளச்சல் மீன் ஏலக்கூடம் நேற்று வெறிச்சோடியது. வியாபாரிகள், பொதுமக்கள் மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்ட குளச்சல் மீனவர்கள் தொடர்ந்து துறைமுகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.இந்நிலையில் குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் தலைவர் வற்கீஸ் தலைமையில் மீனவர்கள் குளச்சல் பீச் சந்திப்பில் திடீர் சாலை மறியல் செய்தனர். இதில் விசைப்படகு சங்க இணை செயலாளர் ஆன்றனி தாஸ், விசைப்படகு உரிமையாளர் ஓட்டுனர் சங்கம், துறைமுக வியாபாரிகள் ஏலக்காரர்கள் பொதுநல அமைப்பு, முட்டம் விசைப்படகு சங்கம் நிர்வாகிகள், பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது.

தகவலறிந்த குளச்சல் ஏ.எஸ்.பி பிரவின் கெளதம் விரைந்து சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், தூத்துக்குடியில் சிறை பிடிக்கப்பட்ட குளச்சல் விசைப்படகுகள் மற்றும் மீனவர்கள் விடுவிக்கப்படுவர். அதற்கான நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது என தெரிவித்தார். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டுவிட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தினால் குளச்சல் பீச் சந்திப்பில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழக அரசிடம் கோரிக்கை

தூத்துக்குடியில் சிறை பிடிக்கப்பட்டுள்ள குளச்சல் மீனவர்களை உடனே விடுவிக்க தமிழக அரசு மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடமும் பிரின்ஸ் எம்.எல்.ஏவிடமும் கோரிக்கை விடுத்தார்.மேலும் தர்ணாவில் ஈடுபட்ட குளச்சல் மீனவர்களை அ.தி.மு.க.மீனவர் அணி மாநில இணை செயலாளரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளருமான பசலியான் நசரேத் சந்தித்து பேசினார். அப்போது சிறைப்பிடிக்கப்பட்ட குளச்சல் மீனவர்களை விடுவிக்க அ.தி.மு.க துணை நிற்கும், குளச்சல் மீனவர்களின் நியாயமான போராட்டத்திற்கு நானே முன் நிற்பேன் என ஆதரவு தெரிவித்தார்.

The post தூத்துக்குடியில் 6 விசைப்படகுகளுடன் 86 பேர் சிறை பிடிப்பு குளச்சல் மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Kulachal ,Tuthukudi ,Kumari District Kulachal ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் ஹேர்டை குடித்து ஆசிரியை தற்கொலை