×
Saravana Stores

கடலாடி அருகே களரி திருவிழாவில் ஆட்டுக்கறியை தீயில் வாட்டி சாப்பிட்டு வினோத வழிபாடு

சாயல்குடி : கடலாடி அருகே கோயிலுக்கு வெட்டப்படும் ஆட்டுக்கறியை தீயில் வாட்டி, ஆண்கள் மட்டும் சாப்பிடும் வினோத வழிபாடு கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ளது மங்களம் கிராமம், சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் பூர்வீக கிராமம் என வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இக்கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விவசாயம், கூலி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சிவன்கோயில், செல்லியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களும், கிராமத்தில் நொண்டிவீரன்சாமி கோயிலும் உள்ளது. இங்கு பூலித்தேவன் விக்கிரகம் அமைத்து சாமியாக கும்பிட்டு வருகின்றனர்.

கிராமத்தின் காவல் தெய்வமாக நொண்டிவீரன்சாமி இருப்பதால் ஆண்டு தோறும் மாசி களரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பகுதியில் கடந்த 11ம் தேதி மாசி களரி திருவிழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில் உள்ளூரில் வசிப்பவர்கள் மட்டும் பொங்கல் வைத்து, முடிகாணிக்கை செலுத்தி சாமி கும்பிட்டு, கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர், வெளியூர்களில் வசித்து வரும் இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்களின் வசதிக்கேற்ற நாளில் தொடர்ந்து 10 தினங்களுக்கு மேலாக குடும்பத்துடன் வந்து சாமிகும்பிட்டு கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோயிலில் வெட்டப்படும் கிடாயின் தலை, குடல், உடல் பகுதி என அனைத்தும் தண்ணீரில் சுத்தம் செய்த பிறகு தீயில் வாட்டி, சோறு இல்லாமல் கறியை மட்டுமே முழு உணவாக உண்ணும் வினோத வழிபாடு நடந்து வருகிறது.

இது குறித்து மங்களம் கிராம பெரியோர் கூறுகையில், முன்னோர்கள் தான் பெரும்பாலும் குலதெய்வமாக உள்ளனர். இதில் காவல்தெய்வமான சாமிக்கு அவர்களின் விருப்ப உணவான அசைவ படையல் படைக்கப்படுகிறது. காய்கள், மசாலா பொருட்கள் சேர்த்து, குழம்பு வைக்கும் வழக்கம் வருவதற்கு முந்தைய பண்டைய காலத்தில் இறைச்சியை தீயில் வாட்டி, உண்ணும் முறை வழக்கத்தில் இருந்தது. அந்த பாரம்பரியப்படி நொண்டிவீரன்சாமிக்கு மதுவுடன் கூடிய அசைவ படையல் படைக்கப்படுகிறது.

கிடாய் வெட்டியவுடன் பெரிய இறைச்சி துண்டுகளை அப்படியே தீயில் வாட்டி எடுத்து, நன்றாக வெந்தவுடன்(வேக வைத்தல்) அதனை துண்டுகளாக்கி சாப்பிடப்படுகிறது. குறிப்பாக ஆண்கள் மட்டுமே சாப்பிடுகின்றோம். இப்படி அசைவ படையல் படைத்து வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் பல தலைமுறையாக இந்த வழக்கம் தொடர்கிறது என்றனர்.

The post கடலாடி அருகே களரி திருவிழாவில் ஆட்டுக்கறியை தீயில் வாட்டி சாப்பிட்டு வினோத வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Kalari festival ,Kudaladi ,Ramanathapuram district ,Mangalam ,Cuddaly ,Phulithevana ,
× RELATED சீசன் துவங்கியும் தண்ணீர் இன்றி சரணாலயத்திற்கு வராத பறவைகள்