×

ஊத்தங்கரை அருகே 16ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி : ஊத்தங்கரை அருகே 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், குன்னத்தூர் அருகே உள்ள சென்னானூர் பகுதி, தற்போது தமிழக அரசால் தொல்லியல் அகழ்வாய்வு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து 300 மீ., தொலைவில் உள்ள மாந்தோப்பில், இரண்டு பனைமரங்களுக்கு இடையில், 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த நடுகல்லில் வீரன் ஒருவன், வலது கையில் ஈட்டியை ஏந்தியவாறும், இடது கையில் கேடயத்தை தாங்கியவாறும் பொறிக்கப்பட்டுள்ளது. கேடயத்தில் பூ வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது தெளிவாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்களில், ஈட்டியை வீசும் நிலையில் காணப்படுவது அரிதானது.

இதன் வடிவமைப்பை பார்க்கும் போது, இது 16ம் நூற்றாண்டை சார்ந்தது என தெரிய வருகிறது. இந்த நடுகல்லை இவ்விடத்திலேயே பாதுகாக்க, தமிழக தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஊரின் தொன்மையை அனைவரும் அறியலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது, சதானந்த கிருஷ்ணகுமார், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார், பிரகாஷ், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post ஊத்தங்கரை அருகே 16ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Uthankarai ,Krishnagiri ,Uthangarai ,Krishnagiri District, ,Oodhangarai Circle, Sennanur ,Gunnathur ,Tamil Nadu Government ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு