×

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்பி வெற்றிக்கு திண்ணை பிரசாரம் மூலம் வலு சேர்க்க வேண்டும்

தூத்துக்குடி, மார்ச் 23: தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றிக்கு திமுக அரசின் சாதனைகளை திண்ணை பிரசாரம் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அண்ணாநகர் பகுதிக்குட்பட்ட பாகமுகவர்கள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபின் கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எதிரான நீட் தேர்வு, குடியுரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி தலையாட்டி பொம்மையாக இருந்து கொண்டு ஆதரித்தார்.

இப்போது பாஜவுடன் தொடர்பு இல்லை என்று சொல்லி இரண்டு கட்சியினருமே நாடகமாடி மக்களை ஏமாற்றி வருவார்கள். அதற்கு நாம் இடமளிக்க கூடாது, திமுக ஆட்சியின் சாதனைகளை திண்ணை பிரசாரம் மூலம் மக்களிடம் எடுத்துச்சென்று கட்சிக்கும், ஆட்சிக்கும் வலிமை சேர்க்க வேண்டும். வரும் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து நிற்கும் கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது. அந்தளவிற்கு உங்களது களப்பணிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்றார்.

இதில், அண்ணாநகர் பகுதிச்செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் கனகராஜ், இசக்கிராஜா, ஜான், பொன்னப்பன், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், டாஸ்மாக் பணியாளர்கள் சங்க செயலாளர் வேல்முருகன், வட்டச்செயலாளர்கள் செந்தில்குமார், சுரேஷ், பத்மாவதி, பாலு (எ) பாலகுருசாமி, சரவணன், பொன்னுச்சாமி, பொன்பெருமாள், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் (எ) செல்வின், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்பி வெற்றிக்கு திண்ணை பிரசாரம் மூலம் வலு சேர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Thoothukudi Constituency ,Thoothukudi ,Minister ,Geethajeevan ,DMK government ,Thoothukudi Assembly Constituency Annanagar ,Dinakaran ,
× RELATED மிக கனமழைக்கான எச்சரிக்கை:...