×

அருமனை அருகே பள்ளியில் புகுந்து அட்டகாசம் செய்த குரங்கு சிக்கியது

 

அருமனை, மார்ச் 23: அருமனை அருகே தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் இருந்து உணவை பறித்து அட்டகாசம் செய்த குரங்கை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். அருமனை சந்திப்பு பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அருமனை சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றிலும் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கவர்ந்திழுக்கப்பட்ட குரங்கு ஒன்று பள்ளி வளாகத்தையே சுற்று சுற்றி வந்தது.

மதிய நேரத்தில் மாணவர்கள் சாப்பிடுவதற்காக டிபன் பாக்சை திறக்கும் சத்தம் கேட்டு எங்கிருந்தாலும் இந்த குரங்கு ஓடி வந்துவிடுமாம். வித விதமான சாப்பாடு கொண்டு வரும் மாணவர்களிடம் இருந்து உணவை பிடுங்கி ருசித்து விடுமாம் இந்த குரங்கு. கொடுக்கவில்லை என்றால் மிரட்டல்தான். சிறு குழந்தைகள் என்பதால் குரங்கை பார்த்ததுமே மாணவர்கள் உணவை கீழே வைத்துவிட்டு ஓடி விடுவார்கள். சிலநேரத்தில் மாணவர்களின் சீருடையை பிடித்து இழுத்து சேட்டை செய்யவும் இந்த குறும்புக்கார குரங்கு தவறுவதில்லை.

ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரையும் மிரட்டிய குரங்கு, ஒருதடவை செல்போனை பறித்துக்கொண்டு மரத்தில் ஏறி போக்கு காட்டியுள்ளது. நாளுக்கு நாள் குரங்கின் அட்டகாசம் அதிகரித்து வந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் களியல் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து களியல் வன அலுவலர் முகைதீன் தலைமையில் வனவர் கணேஷ் மற்றும் மகாராஜா, வேட்டை தடுப்பு காவலர்கள் விஜய சங்கர், சஜி ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் குரங்கை பிடிக்க கூண்டு வைத்தனர்.

அதில் குரங்கு விரும்பி சாப்பிடும் பழங்களை வைத்தனர். வழக்கம்போல உணவை ஒரு பிடி பிடிக்கலாம் என நினைத்த குரங்கு ஓடி வந்து கூண்டுக்குள் இருந்த உணவை எடுத்தது. ஆனால் வசமாக சிக்கிக்கொண்டது. இனி எந்த காலத்திலும் இந்த குரங்கு இங்கு வரவே முடியாத வகையில் அந்த குரங்கை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டுவிடுமாறு பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

The post அருமனை அருகே பள்ளியில் புகுந்து அட்டகாசம் செய்த குரங்கு சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Arumanai ,Arumanai Junction ,Dinakaran ,
× RELATED விறகு சேகரித்த மூதாட்டிக்கு வெட்டு தம்பதி மீது வழக்கு