சென்னை: நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் தொடக்க லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட் செய்தது. விராத் கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி இணைந்து இன்னிங்சை தொடங்கினர். டு பிளெஸ்ஸி அதிரடியாக விளையாட, ஆர்சிபி ஸ்கோர் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிறியது.
இருவரும் 4.2 ஓவரில் 41 ரன் சேர்த்து மிரட்டினர். டு பிளெஸ்ஸி 35 ரன் (23 பந்து, 8 பவுண்டரி) விளாசி முஸ்டாபிசுர் வேகத்தில் ரச்சின் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ரஜத் பத்திதார், கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி நடையை கட்ட, ஆர்சிபி 42 ரன்னுக்கு 3 விக்கெட் என திடீர் சரிவை சந்தித்தது. கோஹ்லி 21 ரன் (20 பந்து, 1 சிக்சர்), கேமரான் கிரீன் 18 ரன் எடுத்து முஸ்டாபிசுர் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆர்சிபி 11.4 ஓவரில் 78 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.
இந்த நிலையில், அனுஜ் ராவத் – தினேஷ் கார்த்திக் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி கட்டத்தில் இந்த ஜோடி அதிரடியில் இறங்க, ஆர்சிபி ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இருவரும் 6வது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்து அசத்தினர். அனுஜ் 48 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் ரன் அவுட்டானார். பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன் குவித்தது. கார்த்திக் 38 ரன்னுடன் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை பந்துவீச்சில் முஸ்டாபிசுர் 4 விக்கெட் (4-0-29-4), தீபக் 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 174 ரன்கள் என்கிற இலக்கை நோக்கி சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்தரா களமிறங்கினர். 4வது ஓவரிலேயே கெய்க்வாட் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யாஷ் பந்தில் கிரீனிடம் கேட்சி ஆகி வெளியேறினார். ஆனால், ரச்சின் தனது முதல் போட்டியிலேயே 15 பந்துகளில் 37 ரன்கள்(3 சிக்சர், 3 பவுண்டரி) விளாசி அசத்தினார். அவர் கரன் சர்மா பந்தில் கேட்ச் ஆகி வெளியேற அடுத்து ரகானே களமிறங்கினார்.
ரகானே27 ரன்(19 பந்து, 2 சிக்சர்) மற்றும் மிட்செல் 22 ரன்(18 பந்து 2 சிக்சர்) எடுத்திருந்த நிலையில் இருவரும் அடுத்தடுத்த ஓவரில் அவுட் ஆகினர். இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 34* ரன்கள்(4 பவுண்டரி, 1 சிக்சர்), அவருக்கு பின் வந்த ஜடேஜா 25* ரன் (1 சிக்சர்)இருவரும் சிறப்பாக ஆடி கடைசி வரை அவுட் ஆகாமல் இலக்கை எட்ட உதவினர். இதன்மூலம் 18.4 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றது. பெங்களூரு அணியில் கிரீன் 2 விக்கெட் எடுத்தார்.
* கோஹ்லி டி20 போட்டிகளில் 12,000 ரன் என்ற சாதனை மைல்கல்லை நேற்று கடந்தார். ஐபிஎல் தொடரில் அவர் சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன் என்ற சாதனையையும் நேற்று நிகழ்தினார்.
The post ஐபிஎல் 2024: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை அணி..! appeared first on Dinakaran.