×

கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசன், சென்னையில் நேற்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. உலகம் முழுவது கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் உள்பட மொத்தம் 10 அணிகள் களமிறங்குகின்றன. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியுடன், டு பிளெஸ்ஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக, தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரங்கம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், பிரம்மாண்ட ஐபிஎல் கோப்பையும் அரங்கில் நிறுத்தப்பட்டிருந்தது. ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கிடையே பாலிவுட் நட்சத்திரம் அக்‌ஷய்குமார் கிரேன் மூலம் அந்தரத்தில் தொங்கியபடி விழா மேடையில் இறங்கினார். அக்‌ஷய், டைகர் ஷெராப் இருவரும் தேசியக் கொடியை ஏந்தியபடி மோட்டார் பைக்கில் மைதானத்தை வலம் வந்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் குழுவினர் இசை மழை பொழிய… அக்‌ஷய், டைகர் ஷெராப் இணைந்து நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தனர். தொடர்ந்து இந்தி திரைப்பட பாடகர் சோனு நிகம், ரகுமான் இணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாட… பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உடைகள் அணிந்த கலைஞர்கள் உற்சாகமாக நடனம் ஆடினர்.

ஏ.ஆர்.ரகுமான், சோனு நிகம், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் இந்தி பாடல்களைப் பாடினர். இடையில் ரகுமான் ‘பல்லேலக்கா’ தமிழ் பாடலைப் பாடினார். வண்ணமயமான வாணவேடிக்கை அரங்கை ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் ஐபிஎல் கோப்பையை அரங்குக்கு கொண்டு வந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டு பிளஸ்ஸி உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து, சிஎஸ்கே – ஆர்சிபி மோதிய தொடக்க லீக் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

சேப்பாக்கத்தில் இருந்து…
* சேப்பாக்கம் அரங்கை சுற்றியுள்ள சாலைகளில் நேற்று பிற்பகல் முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர் அதனால் கடற்கரை சாலை, வாலாஜா சாலை, பாரதி சாலை, ஜெகஜீவன் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
* பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு சிஎஸ்கே நிர்வாகம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. மாநகரப் பேருந்தில் பயணிக்க இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
n பறக்கும் ரயில் போக்குவரத்து வேளச்சேரி – சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதனால் பறக்கும் ரயில்களில் ரசிகர்கள் கூட்டம் வழக்கத்திற்கு மாறாகக் குறைவாகவே காணப்பட்டது.
* போட்டி தொடங்குவதற்கு முன்பாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்காக அரங்கம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரம்மாண்ட வடிவிலான ஐபிஎல் கோப்பையும் அரங்கில் நிறுத்தப்பட்டிருந்தது.

The post கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா appeared first on Dinakaran.

Tags : IPL festival ,CHENNAI ,IPL T20 ,Chennai Super Kings ,Sunrisers Hyderabad ,IPL ,Dinakaran ,
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி