×

சாரி பார் டிஸ்டர்பன்ஸ் நீங்க எந்த ஊரு? பாஜவின் வெளியூர் வேட்பாளர்கள்

தமிழகத்தில் பாஜ தலைமையிலான கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு போக 19 தொகுதிகளில் பாஜ போட்டியிடுகிறது. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய 4 கட்சிக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 4 கட்சிகளும் பாஜவின் தாமரை சின்னத்தில் தான் போட்டியிடுகிறது.

இதையடுத்து 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது. 4 கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் பாஜவே அறிவித்தது கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜ அறிவித்துள்ள பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களுக்கு சம்பந்தமே இல்லாத ெதாகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளனர். அதாவது, முன்னாள் வேலூர் மேயர் பி.கார்த்தியாயினி சிதம்பரம்(தனி) தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வி.பாலகணபதி திருவள்ளூர் தொகுதியிலும், சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். கோவையை சேர்ந்த பாஜ பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், திருப்பூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கரூரை சேர்ந்த பாஜ தலைவர் அண்ணாமலை, கோவை மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

திருப்பூரை சேர்ந்த எல்.முருகன், நிலகிரி தொகுதியிலும், விழுப்புரத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமன், திருவண்ணாமலையிலும், சென்னை தி.நகரைச் சேர்ந்த தேவநாதன், சிவகங்கையிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். இப்படி தொகுதிக்கே சம்பந்தமில்லாதவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். அந்தந்த தொகுதியில் பாஜ சார்பில் வேட்பாளர்கள் யாரும் இல்லையா? அல்லது தோல்வி பயம் காரணமா? என்ற கேள்வி பாஜவினரிடையே ஏற்பட்டுள்ளது.

டிவிட் போட மறந்த திருச்சி சூர்யா
திருச்சி தொகுதி, பேராசிரியர் ராம.சீனிவாசனுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானவுடன், வேடந்தாங்கல் பறவைகள் என்று கூறி அவரை திருச்சி வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று டிவிட் போட்டார். தானே அவருக்கு எதிராக வேலை செய்வேன் என்றார். இப்போது அண்ணாமலையே சொந்த ஊரை விட்டு விட்டு வேறு தொகுதிக்குச் சென்று விட்டார். இதேபோல பலரும் தொகுதி மாறி நிற்கின்றனர். இதை எல்லாம் கண்டிக்காமல், திருச்சி சூர்யா டிவிட் போட மறந்து விட்டாரா அவருக்கு அவரை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

The post சாரி பார் டிஸ்டர்பன்ஸ் நீங்க எந்த ஊரு? பாஜவின் வெளியூர் வேட்பாளர்கள் appeared first on Dinakaran.

Tags : BAJA ,Tamil Nadu ,New Court of Justice ,Democratic Party of India ,Tamil People's Development Corporation ,People's Education Development Corporation of India ,Bajaj ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...