×

மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி அடைந்ததால் ஜாதி கூட்டணி அமைத்த பாஜ: கூட்டணி கட்சி தொண்டர்களே வெறுப்பதால் குழப்பத்தில் தவிப்பு

தமிழகத்தில் எப்படியாவது கால் பதித்து விட வேண்டும் என தவியாய் தவிக்கிறது பாஜ. இதற்காக சாம, பேத, தான, தண்டம் என எல்லா வகையிலும் பிரயத்தனம் காட்டி வருகிறது. எவ்வளவுதான் முயன்றாலும் நோட்டாவை தாண்ட முடியவில்லை. அந்த தருணத்தில்தான் ஜெயலலிதாவின் இறப்பால் அதிமுகவில் ஏற்பட்ட சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அந்த கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்ய ஆரம்பித்து விட்டது. பீகாரில் நிதிஷ்குமாரை பயன்படுத்தி கட்சியை வளர்த்தது போல, இங்கும் அதிமுகவை வைத்து தங்கள் பலம் கூடி விட்டதாக காட்ட வேண்டும் என்பதற்கான அத்தனை வழிகளையும் பாஜ கடைப்பிடித்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜ, பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தேமுதிக மற்றும் சிறு கட்சிகள் இடம் பெற்றன. 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக, பாஜ, பாமக, தமிழ்மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் மற்றும் சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்தன.

இதனிடையே, அதிமுக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையில் இரண்டாக பிளவுபட்டிருந்தபோதும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற இருதரப்புமே பாஜவை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இரட்டை இலை சின்னம் இபிஎஸ் வசமான பிறகு, ஓபிஎஸ் தனித்து விடப்பட்டார். இபிஎஸ் தலைமையில் அதிமுகவும் பாஜவும் கூட்டணியில் இருந்தாலும் பாஜ தலைவர் அண்ணாமலையின் சில நிலைப்பாடுகள், நிர்ப்பந்தங்கள் அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. பேரறிஞர் அண்ணா குறித்தும், அதிமுக தலைவர் மறைந்த ஜெயலலிதா பற்றியும் அண்ணாமலை வெளியிட்ட கருத்துக்கள் கூட்டணிக்குள் வெறுப்பையும், புகைச்சலையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அதிமுக பாஜ கூட்டணி பிரிந்தது.

அதிமுகவுக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன என பாஜ தேசிய தலைவர்கள் கூறி வந்தாலும், எந்த விதமான பலனும் ஏற்படவில்லை. கடைசியில், பாஜவுடனான கூட்டணி முடிவுக்கு வந்ததாக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனால் 2024 மக்களவை தேர்தலில் பழைய கூட்டணி நீடிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் ஆகி விட்டது. அதிமுக கழன்று விட்டதால் யார் முதுகில் ஏறி சவாரி செய்வது என்பதில் குழப்பம்; திகைப்பும் இருந்த நிலையில், ஓபிஎஸ் பக்கம் நகரத்தொடங்கியது பாஜ. எடப்பாடியிடம் இருந்து இரட்டை இலையை பறிப்பது அல்லது அந்த சின்னத்தை முடக்குவது என்ற நோக்கில் இருந்த ஓபிஎஸ்சுக்கு பாஜவின் உதவி தேவைப்பட்டதால், அவரை பயன்படுத்தி வாக்கு சதவீதத்தை உயர்த்த முடியுமா என பாஜ தரப்பில் கணக்கு போடப்பட்டது.

மாபெரும் தேசியக் கட்சியாக, களத்தில் தங்களுக்கு அமோக ஆதரவு இருப்பதாக காட்டிக்கொண்டாலும், தனித்துப் போட்டியிட்டால் செல்வாக்கு இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்து விடும் என்பதால், சிறிய கட்சிகளை இழுக்க தொடங்கியது. இதை சாத்தியமாக்க ஒன்றிய ஏஜென்சிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியும், மாநிலங்களவை எம்பி பதவி தருவதாக ஆசை காட்டியும் ஒவ்வொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தையை அண்ணாமலை நடத்தி வந்தார்.

குறிப்பாக வடதமிழகத்தில் பாமகவைத்தான் பாஜ பெரிதும் நம்பியிருந்தது. அதிமுக மற்றும் பாஜவுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஏறக்குறைய ஒரு மாதமாக இது நீடித்தது. பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் அதிமுகவுடன்தான் போக வேண்டும் என நினைக்க, ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதால் பாஜவுடன் சேர்வதுதான் எதிர்காலத்துக்கு நல்லது என அன்புமணி வலியுறுத்தி வந்ததால், எந்த முடிவும் ஏற்படாமல் இழுபறி நீடித்தது. ஒரு வழியாக ஒன்றிய அரசின் வழக்கமான வழக்கு அஸ்திரப் பிரயோகங்கள் வேலை செய்ய, பாஜவுடன் கூட்டணி என்ற முடிவுக்கு வந்தார் ராமதாஸ். இதுபோல் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாரிவேந்தரின் ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், ஜி.கே.வாசனின் தாமகா ஆகியவற்றுடன் கூட்டணி ஒப்பந்தத்தை பாஜ இறுதி செய்துள்ளது.

இவற்றில் ஜி.கே.வாசன் தவிர மற்ற அத்தனை கட்சிகளும் ஜாதிக் கட்சிகள் தான். பாமக மூலம் வன்னியர் வாக்குகள், ஜான் பாண்டியனின் தமமுக மூலம் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள், புதிய நீதிக்கட்சி மூலம் முதலியார் வாக்குகள், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் மூலம் யாதவர் வாக்குகள், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் மூலம் முக்குலத்தோர் வாக்குகள் மற்றும் பாரி வேந்தர் மூலம் உடையார் வாக்குகளை ஈர்க்க பாஜ கணக்குப் போட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வடமாநிலங்களில் மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும் பரப்பி அதன் மூலம் ஆதாயம் தேடி வந்துள்ள பாஜவுக்கு, தமிழகத்தில் வேரூன்றியுள்ள திராவிடக் கொள்கை பெரும் சவாலாக அமைந்திருக்கிறது. ஏனெனில் பாஜவின் மதவாதமும், வெறுப்பு அரசியலும் இங்கு கடும் தோல்வியை அடைந்திருக்கின்றன. அதனால்தான் இங்கு ஜாதிக்கூட்டணியை பாஜ அமைத்துள்ளது. ஆனாலும், பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததை அந்தந்த கட்சி தொண்டர்கள் கடுமையாக எதிர்த்து வருகி்னறனர். இது பாஜவுக்கு பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

The post மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி அடைந்ததால் ஜாதி கூட்டணி அமைத்த பாஜ: கூட்டணி கட்சி தொண்டர்களே வெறுப்பதால் குழப்பத்தில் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Baja ,Tamil Nadu ,Daviai ,Samaa ,Peda ,Dana ,Punam ,Nota ,Jayalalithaa ,
× RELATED 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு...