×

பழிவாங்கும் நோக்கில் கெஜ்ரிவால் கைதால் இந்தியா கூட்டணிக்கு அதிக ஓட்டு: அரசியல் வல்லுனர்கள் கருத்து

புதுடெல்லி: அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகி உள்ளதால் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணிக்கு மோடி அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் காரணமாக அனுதாப அலை வீசும் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.கடந்த 2011ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஊழக்கு எதிரான லோக்பால் போராட்டத்தில் அன்னா ஹசாரே,கெஜ்ரிவால் ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். அதற்கு பின்பு ஆம் ஆத்மியை கெஜ்ரிவால் தொடங்கினார். கடந்த 2013ல் டெல்லியில் முதல்முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளித்தது.

ஜன் லோக்பால் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாததால் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2020ம் ஆண்டு தேர்தலிலும் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். கட்சி ஆரம்பித்த 12 ஆண்டுகளுக்குள் தேசிய அரசியலில் மூன்றாவது பெரிய கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்தது.

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி பிரபலமான கெஜ்ரிவால் தற்போது மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர் ஊழல்வாதி என்று முத்திரை குத்த மோடி அரசு முயற்சித்தது. ஆனால், அந்த முயற்சி அவர்களுக்கே எதிராக திரும்பி உள்ளது. கெஜ்ரிவால் அப்பழுக்கற்றவர், அவரை பழி வாங்கும் நோக்கில் அமலாக்கத்துறையை ஏவி மோடி அரசு கைது செய்துள்ளதாக வட மாநிலங்களில் மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

நேர்மையான ஒருவரை கைது செய்துள்ளது மக்களவை தேர்தலில் ஆம்ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணிக்கு அனுதாப வாக்குகளை அள்ளி தரும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post பழிவாங்கும் நோக்கில் கெஜ்ரிவால் கைதால் இந்தியா கூட்டணிக்கு அதிக ஓட்டு: அரசியல் வல்லுனர்கள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,India Alliance ,New Delhi ,Arvind Kejriwal ,Aam Aadmi Party ,Lok Sabha elections ,Modi government ,Dinakaran ,
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்