×

தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒன்றிய அமைச்சர் ஷோபாவுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒன்றிய அமைச்சர் ஷோபாகராந்தலஜேவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

பெங்களூரு நகர்த்பேட்டையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் ஷோபா கராந்தலஜே, பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் வெடிகுண்டு வைத்து சென்றதாக குற்றம்சாட்டினார். அவரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் தனது கருத்தை வாபஸ் பெற்று கொள்வதுடன் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்பதாக ஷோபா கராந்தலஜே தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் ஷோபா கராந்தலஜே மீது நடவடிக்கை எடுக்ககோரி திமுக சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதையேற்று ஷோபா கராந்தலஜே மீது 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆணையத்தின் உத்தரவை ஏற்று ஷோபா கராந்தலஜே மீது, நகர்த்பேட்டை போலீஸ் நிலையத்தில் மாநில தேர்தல் அதிகாரி புகார் கொடுத்தார். அதையேற்று போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யகோரி ஷோபா கராந்தலஜே, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்ஷித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்தார். அதை தொடர்ந்து நீதிபதி கூறும்போது, `மனுதாரர் கூறியுள்ள கருத்துக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் பேசும் வார்த்தை முத்துபோல் இருக்க வேண்டும் என்று கூறியதுடன் உங்கள் கட்சிக்காரர் (ஷோபா) எப்படி பேச வேண்டும் என்று சொல்லி கொடுங்கள் என்று அறிவுரை வழங்கி ஷோபாகராந்தலஜேவுக்கு எதிராக பதிவாகி இருக்கும் எப்ஐஆர் மற்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

The post தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒன்றிய அமைச்சர் ஷோபாவுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : High Court ,Union Minister ,Shobha ,Bengaluru ,Karnataka High Court ,Shobhakaranthalaje ,Rameswaram ,Nagarpettai, Bengaluru ,
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...