×

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதம்: இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.

கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது. நேற்று முன்தினம் (21ம் தேதி) தமிழ்நாட்டை சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Chief Minister ,M.K.Stal ,Union External Affairs ,Minister ,CHENNAI ,M. K. Stalin ,Union External ,Affairs Minister ,Jaishankar ,M.K.Stalin ,Union External Affairs Minister ,S. Jaishankar ,Union ,External Affairs Minister ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...