×

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிக்கிய மருந்து நிறுவனத்திடம் ரூ.34.5 கோடி வசூலித்த பாஜக: தேர்தல் பத்திர விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிக்கிய தனியார் மருந்து நிறுவனத்திடம் தேர்தல் பத்திரம் மூலம் பாஜக ரூ.34.5 கோடி பெற்றதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுகளை தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நேற்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. அதில், தேர்தல் பத்திரத்தை வாங்குபவரின் பெயர், அதன் மதிப்பு மற்றும் பத்திரத்துக்கான பிரத்யேக எண், அதை பணமாக்கிய அரசியல் கட்சியின் பெயர், பணத்தை திரும்பபெற்ற அரசியல் கட்சிகளின் வங்கிக்கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் உள்ளிட்ட தரவுகள் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் முழு வங்கிக் கணக்கு எண்கள், கேஒய்சி விவரங்கள் ஆகியவை கணக்கின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. அதேபோல, தேர்தல் பத்திரங்களை வாங்கியவரின் கேஒய்சி விவரங்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை என்று எஸ்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேகா இன்ஜினியரிங் நிறுவனம் மட்டும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு 600 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்துள்ளது. ரிலையன்ஸுடன் தொடர்பு இருப்பதாகக் கூறும் க்விக் சப்ளை செயின் நிறுவனம், பாஜகவுக்கு ரூ.375 கோடியை தந்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பி.சரத் சந்திர ரெட்டியின் அரபிந்தோ ஃபார்மா லிமிடெட் நிறுவனம், பாஜகவுக்கு மொத்தம் ரூ.34.5 கோடி கொடுத்துள்ளது. கடந்த 2022 நவம்பர் 10ம் தேதி மதுபான வழக்கில் சரத் சந்திர ரெட்டி கைது செய்யப்பட்ட அடுத்த ஐந்து நாட்களுக்குள் ரூ.5 கோடிக்கான தேர்தல் பத்திரத்தை அந்த நிறுவனம் வாங்கியது. நவம்பர் 21ம் தேதி அன்று அந்த பத்திரத்தை பாஜக பணமாக்கியது. பின்னர், சரத் சந்திர ரெட்டி இந்த வழக்கில் மன்னிப்புக் கோரிய சாட்சியாக சேர்க்கப்பட்டார். அடுத்த ஆண்டு, ஜூன் மாதம் அவருக்கு டெல்லி நீதிமன்றம் மன்னிப்பு வழங்கியது. சரத் சந்திர ரெட்டி மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும், கலால் வழக்கில் தொடர்புடைய வர்த்தகர்கள், உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து சதி செய்ததாகவும், டெல்லி மதுபானக் கொள்கையில் நியாயமற்ற சந்தை நடைமுறைகளில் ஈடுபட்டதாகவும் அமலாக்க துறை குற்றம் சாட்டி இருந்தது. தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி பார்த்தால், கடந்த 2021 ஏப்ரல் முதல் 2023 நவம்பர் மாதத்துக்கு இடையில், அரபிந்தோ பார்மா நிறுவனம் ரூ.52 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளது. கிட்டத்தட்ட 66% தொகையை பாஜகவுக்கு தந்துள்ளது.

மேலும் இந்தப் பத்திரங்களில் 29% தெலங்கானாவைச் சேர்ந்த பாரத் ராஷ்டிர சமிதி கட்சிக்கு தந்துள்ளது. மீதமுள்ள தொகையை ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சிக்கு கொடுத்துள்ளது. அரபிந்தோ பார்மா நிறுவனமானது, நாட்டின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த 2023ல், 24,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை உலகளவில் 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதன் வருவாயில் தோராயமாக 90% சர்வதேச நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. அமலாக்கத்துறை அளித்த தகவலின்படி, ஆம் ஆத்மி தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர், மேற்கண்ட ரெட்டி குழுமத்திடம் இருந்து 100 கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை வழக்கில் நேற்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதான நிலையில், ஏற்கனவே இதே வழக்கில் அரபிந்தோ ஃபார்மா லிமிடெட் நிறுவன தலைவர் பி.சரத் சந்திர ரெட்டி கைதானார். ஆனால் அவரது நிறுவனமே பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதியை வாரி வழங்கியுள்ளது. எனவே டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் பாஜக தலைவர்களுக்கும் தொடர்பு இருக்குமோ? என்று கேள்விகள் எழுந்துள்ளன.

The post டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிக்கிய மருந்து நிறுவனத்திடம் ரூ.34.5 கோடி வசூலித்த பாஜக: தேர்தல் பத்திர விவகாரத்தில் திடுக்கிடும் தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,New Delhi ,Supreme Court ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...