×

மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி: உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு பணிந்து பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு!!

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடி அமைச்சராக இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்கிறார். சற்று நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், பதவியேற்புக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் அவரை மீண்டும் அமைச்சராக்க பரிந்துரைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி கடிதம் எழுதினார். ஆனால் அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘‘பொன்முடிக்கு பதவியேற்பை ஆளுநர் நடத்தாதது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நாளை (இன்று) வரை ஆளுநருக்கு அவகாசம் வழங்குகிறோம்.
இல்லையேல் நாங்கள் ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என கடுமையாக எச்சரித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து பொன்முடி பதவியேற்பிற்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சகமும், ஒன்றிய அரசு தலைமபிறகு வழக்கறிஞரும் அறிவுறுத்தியதை தொடர்ந்து ஆளுநர் ரவி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். நான்காவது முறையாக உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பொன்முடிக்கு பதவியேற்பு நடத்த வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிலையில், பதவியேற்பு நடத்த ஆளுநர் முடிவு எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடி அமைச்சராக இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடக்கிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

The post மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி: உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு பணிந்து பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Ponmudi ,Governor RN ,Ravi ,Supreme Court ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Ponmudi ,Stalin ,Governor ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து