×

திருவாரூரில் லேசான சாரல் மழை வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

*உற்சாகத்துடன் தேர் இழுத்த பக்தர்கள்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை நேரத்தில் லேசான மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக கோடை வெப்பம் ஓரளவு குறைந்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கி முடிவுறும் நிலையில் அதன் பின்னர் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பனி காலமாக இருப்பது வழக்கமாக இருந்து வருவதுடன் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிப்பது வழக்கம்.

ஆனால் நடப்பாண்டில் இந்த வெயில் என்பது நடப்பு (மார்ச்) மாதத்திலேயே துவங்கியுள்ளது. இதனையொட்டி சாலைகளில் நடமாடும் பொது மக்கள் தற்போதே குடை பிடித்தவாறு செல்லும் நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த கோடை காலத்தில் வழக்கமாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் துவங்கி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த வெயில் காலத்தின் போது வழக்கத்தை விட கூடுதலான அளவில் மனிதர்கள் உடலில் வெப்பம் அதிகரிப்பதையொட்டி காய்ச்சல், அம்மை, மயக்கம் மற்றும் சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த கோடை வெயிலின் போது மனிதர்கள் தங்களை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக இளநீர், தர்பூசணி பழங்கள், வெள்ளரிப்பிஞ்சுகள், நீர்மோர் உள்ளிட்டவற்றை அருந்துவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் நோய்களிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள அதிகளவில் நீர் அருந்துவதுடன், நீர் சத்து அதிகம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை தினந்தோறும் சேர்த்துகொள்ள வேண்டும்.

மேலும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை தவிர்த்துகொள்ள வேண்டும் என்பதுடன் இந்த கோடை வெயிலிலிருந்து நோய் ஏற்படுவதை தவிர்த்துகொள்ள பொது மக்கள் தங்களது பணிகளுக்காக வெளியில் செல்வதை குறைத்துகொள்ள வேண்டும் அவ்வாறு பணி காரணமாக வாய்ப்பில்லாமல் போகும் பட்சத்தில் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையில் வெயிலின் உச்ச கால நேரத்திலாவது தவிர்த்துகொள்வது நல்லது.

மேலும் இந்த சீதோஷன நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல், அம்மை நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதால் அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் தாங்களாகவே மருந்து மாத்திரைகளை எடுத்துகொள்ளாமல் உடன் அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவகல்லூரி மருத்துவமனையை அனுகுமாறும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுடன் குழந்தைகளையும் பாதுகாப்பாக பெற்றோர்கள் வைத்துக்கொள்ள வேண்டும், கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துசெல்வதை தவிர்க்க வேண்டும் என்பதுடன் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அனுக வேண்டும் என மருத்துவதுறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் கடந்த ஒரு மாத காலமாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி முதல் 5.30 மணி வரையில் திருவாரூர் நகர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் லேசான மழை பெய்ததுடன் அதன் பின்னர் பகல் 10 மணி வரையில் மேகமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசியது. இதேபோல் திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் அதிகாலை முதல் காலை 8.30 மணி வரையில் மிதமான மழை பெய்த நிலையில் மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 10 மணி வரையில் மேகமூட்டம் காணப்பட்டது. இதன்காரணமாக பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர் மேகமூட்டம்

வழக்கமாக திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா என்பது காலை 7.30 மணி முதல் 8 மணிக்குள் துவங்கி வடம் பிடிக்கப்படும். நேற்று காலை 8.50 மணியளவில் வடம் பிடித்து துவக்கப்பட்டது. வழக்கமான நேரத்தை விட சுமார் ஒரு மணி நேரம் வரையில் விழா தாமதமாக துவங்கியதால் கோடை வெயில் காரணமாக ஆழித்தேரை வடம் பிடித்து இழுப்பது மிகவும் சிரமம் என்று கருதிய நிலையில் நேற்று அதிகாலையில் லேசான மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக ஆரூரா தியாகராஜா கோஷத்துடன் பக்தர்கள் உற்சாகமாக தேரை இழுத்து சென்றது குறிப்பிடதக்கது.

The post திருவாரூரில் லேசான சாரல் மழை வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tamil Nadu ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக...