×

நீலகிரியில் காலநிலையில் மாற்றம் நீர் பனி கொட்டுவதால் குளிர் அதிகரிப்பு

ஊட்டி : நீலகிரியில் நீர் பனி விழுவதால் காலை நேரங்களில் குளிர் அதிகரித்துள்ளது. புல்வெளிகளில் கண்ணாடி துண்டுகள் போன்று பனித்துளிகள் காட்சியளிக்கின்றன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், கடந்த மூன்று மாதங்களாக ஊட்டியில் குளிர் வாட்டியெடுத்தது.
ஜனவரி மாதத்தில் பல நாட்கள் ‘5’ டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்பநிலை சென்றது. உறை பனி தாக்கம் கடந்த இரு மாதங்களாக நீடித்த நிலையில், ஒரு சில பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், தேயிலை தொழில் பாதிக்கப்பட்டது.அதே போல் சில பகுதிகளில் காய்கறி தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், தாவரவியல் பூங்கா உட்பட பெரும்பாலான பூங்காக்களில் உள்ள புல் மைதானங்கள் மற்றும் செடி, கொடிகள் பனியால் பாதிக்கப்பட்டன.அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டியெடுத்த நிலையில், தேயிலை தோட்டம் மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.அதே போல், சுற்றுலா பயணிகளும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரை தாக்குபிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உறை பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. இதனால், குளிரும் குறைந்தது. அதிகாலை நேரங்களில் மட்டுமே லேசாக குளிர் காற்று வீசியது.பகல் நேரங்களில் வெயில் வாட்டியெடுக்க துவங்கியுள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக ஊட்டியில் நீர்பனி விழத் துவங்கியுள்ளது.

ஊட்டி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்பனி விழத் துவங்கியுள்ளதால் மீண்டும் காலை நேரம் மற்றும் மாலை நேரங்களில் குளிர் காணப்படுகிறது. மேலும் புல்வெளிகள் மேல் கண்ணாடி துண்டுகள் போன்று இந்த பனித்துளிகள் காட்சியளிக்கின்றன. இதனால் புல்வெளிகள் மற்றும் தேயிலைச் செடிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

The post நீலகிரியில் காலநிலையில் மாற்றம் நீர் பனி கொட்டுவதால் குளிர் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Ooty ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்