×

தேர்தல் நடத்தை விதிமுறையால் மாட்டுச் சந்தையில் வியாபாரம் பாதிப்பு

ஈரோடு : தேர்தல் நடத்தை விதிமுறையால் பணம் பறிமுதல் செய்யப்படுவதையடுத்து ஈரோடு மாட்டுச் சந்தையில் வியாபாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 16ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து, அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன.

இதையடுத்து, ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதனால், முக்கிய ஜவுளி வியாபார கேந்திரமான ஈரோட்டில் ஜவுளி வியாபாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதேபோல கருங்கல்பாளையத்தில் மாட்டு சந்தையும் கடுமையான வியாபார பாதிப்பை சந்தித்துள்ளது.ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு புதன்கிழமை அடிமாடுகளுக்கான சந்தையும், வியாழக்கிழமை பசுக்கள், எருமை மாடுகள், வளர்ப்பு கன்றுகளுக்கான சந்தையும் நடைபெற்று வருகின்றன.

இங்கு வாரந்தோறும் 700க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். இங்கு மாடுகளை வாங்குவதற்காக கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வது வழக்கம். ஒரு வெளி மாநில வியாபாரி குறைந்தது 10 மாடுகள் வரை வாங்கி செல்வார். இதன் மூலமாக ரூ.5 முதல் 10 லட்சம் வரை வியாபாரம் நடைபெறும்.

இவ்வாறு பல வியாபாரிகளால் மாட்டுச் சந்தை நாளான்று கோடி கணக்கில் வர்த்தகம் நடைபெறும். இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து வந்த 10க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடமிருந்து தேர்தல் பறக்கும்படையினர் பணம் பறிமுதல் செய்திருப்பது வெளி மாநில வியாபாரிகளை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது.

இதனால் நேற்று நடைபெற்ற மாட்டுச் சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வரத்து முற்றிலுமாக இல்லாமல் போனது. இதனால் மாட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில உள்ளூர் வியாபாரிகள் மட்டும் வந்திருந்து குறைந்த அளவிலான மாடுகளை வாங்கிச் சென்றனர். இதனால் மாட்டுச் சந்தை வியாபாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தேர்தல் முடிந்த பின்னரே வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

The post தேர்தல் நடத்தை விதிமுறையால் மாட்டுச் சந்தையில் வியாபாரம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...