×

முத்துப்பேட்டை மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்தாலும் மவுசு குறையாத கொடுவா மீன்கள்

*கிலோ ரூ.700க்கு விற்பனை

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒரு கடற்கரைப் பகுதியாகும். மேலும் இங்கு இருக்கும் சிறப்பு வாய்ந்த லகூன் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய அலையாத்திக்காடுகள் உள்ளது. அலையாத்திக்காடுகளின் வேர்களிலிருந்து உற்பத்தியாகும் நண்டு, இறால், மீன்கள் அதிக ருசிகள் கொண்டதாகும். இதில் இந்த அலையாத்திக்காடுகளின் இலைகள் தண்ணீரில் விழுந்து அந்த இலைகளின் உள்ள அணுக்கள் மூலம் இப்பகுதி கடலில் ருசியில் சிறந்த கொடுவா மீன்கள் அதிகளவில் உற்பத்தி ஆகிறது.

ஆனால் இப்பகுதி கடலில் கொடுவா மீன்கள் மீனவர்கள் வலையில் அதிகளவில் சிக்குவது கிடையாது. இதன் அருகே உள்ள உள்ள கோடியக்கரை, வேதாரண்யம், தோப்புத்துறை, போன்ற பகுதியில் உள்ள கடலில் அதிகளவில் கொடுவா மீன்கள் கிடைக்கிறது.இங்கிருந்து கிடக்கும் கொடுவா மீன்கள் முத்துப்பேட்டை ஆசாத்நகர் மற்றும் பெரிய கடைத்தெரு மீன் மார்க்கெட்டுக்கு தினமும் விற்பனைக்கு வருகிறது. சில தினங்களாக இப்பகுதிக்கு கொடுவா மீன்கள் அதிகளவில் வரத்து உள்ளது.

ஆனால் அதின் கெத்தும் மவுசும் விலையும் குறையவில்லை. தற்பொழுது கொடுவா மீன் முழுசாக கிலோ ரூ.650க்கும், வெட்டி துண்டுபோட்டு ரூபாய் 700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சிறிய மீன் 3 முதல் 5 கிலோவுக்கு மேல். மீடியமாக 10 கிலோ வரையிலும் பெரிய மீன் 25 முதல் 50 கிலோ வரை உள்ளது. மீன் பெரியதாக இருந்தால் ருசியும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மற்ற மீன்களை விட கொடுவா மீன் அதிக ருசிக் கொண்டது என்பதால் மீன் பிரியர்கள் பல பகுதிகளிலிருந்து அன்றாட தேவைக்கும் இல்ல விசேசங்களுக்கும் முத்துப்பேட்டை மீன் மார்க்கெட்டிற்கு வந்து வாங்கி செல்கின்றனர். ஒரு காலத்தில் இந்த கொடுவா மீன் மீது பிரியம் கொண்ட இப்பகுதியை சேர்ந்த சிலர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றவர்கள் கூட கொடுவா மீன் சாப்பிட முடியவில்லையே என்று வேலை பார்க்காமல் திரும்பியும் வந்துள்ளனர். இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து தற்போது கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் வழக்கம்போல் செல்கின்றனர்.

அதனால் எப்போதும் போல அசைவ பிரியர்களுக்கு விருந்தாக பல்வேறு ரக மீன்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் அதிகளவில் கொடுவா மீன் வரத்தும் அதிகளவில் விற்பனையும் தற்பொழுது உள்ளது ஆனாலும் கொடுவா மீன்களின் கெத்து குறையவில்லை.

வெளிநாடுகளிலும் மவுசு

மீன் வியாபாரி சரீப் கூறுகையில், அதிகளவில் ருசி கொண்ட இப்பகுதி கொடுவா மீனுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக மவுசு உண்டு. தற்பொழுது கொடுவா மீன்களின் வரத்து அதிகமாக உள்ளது. ஆனால் விலை குறையவில்லை. தற்பொழுது கிலோ ரூ.700க்கும் விற்பனை செய்து வருகிறோம் கொடுவா மீன் வியாபாரம் சூப்பர் என்றார்.

The post முத்துப்பேட்டை மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்தாலும் மவுசு குறையாத கொடுவா மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur district ,Asia ,Muthuppet ,
× RELATED முத்துப்பேட்டையில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி