×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஒரு ஜனநாயகப் படுகொலை: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஒரு ஜனநாயகப் படுகொலை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ஏற்கனவே ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அதன் மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று சதித் திட்டம் தீட்டியது பா.ஜ.க. ஆனால் மீண்டும் அங்கே ஆட்சி காப்பாற்றப்பட்டிருக்கிறது.

அதை போலவே டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்ப்பதற்கு தேர்தல் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செயப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ஆம் ஆத்மி அமைச்சர் மணீஷ் சிசோடியா சிறையில் இருக்கிறார். அமலாக்கத் துறையின் இத்தகைய அடக்குமுறைகளை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியாவில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலமாகத் தான் மோடி ஆட்சியில் அடக்குமுறைகள் ஏவி விடப்படுகிறது. எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்கு, முடக்குவதற்கு அமலாக்கத் துறையை மோடி பயன்படுத்துகிறார்.

இந்தியா கூட்டணியில் அரவிந்த் கெஜ்ரிவால் சேர்ந்தது முதற்கொண்டு அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காபந்து சர்க்காராக செயல்பட வேண்டிய மோடி அரசு எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. சுயேச்சையாக, சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதால் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதை தான் இது காட்டுகிறது. பாஜகவின் அடக்குமுறைக்கு முடிவு கட்ட 2024 மக்களவை தேர்தலை நாட்டு மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள இந்தியா கூட்டணியை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களுக்கு விரோதமாக செயல்படுகிற சர்வாதிகாரிகள் ஆட்சியில் நீண்டகாலம் நீடித்ததில்லை. அதை போல விரைவில் மோடி ஆட்சி அகற்றப்படும். ஜனநாயகம் நிலைநாட்டப்படும். மோடியின் அடக்குமுறையை இந்தியா கூட்டணி ஓரணியில் திரண்டு நிச்சயம் முறியடிக்கும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஒரு ஜனநாயகப் படுகொலை: செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Chennai ,Tamil Nadu Congress ,Jharkhand ,State ,Hemant Soran ,
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...