×

ஆருத்ரா கோல்டு மோசடியில் தலைமறைவு ரூசோவை கைது செய்ய தனிப்படை

சென்னை: சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் தலா ரூ.1 லட்சத்திற்கு 30 சதவீதம் மாதாந்திர வட்டி, 5 சதவீதம் கமிஷன் மற்றும் 1 கிராம் தங்கக் காசு பரிசு என்று ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடமிருந்து தனது 21 கிளைகளிலும் 2021ம் ஆண்டு ஜனவரி முதல் 2022ம் ஆண்டு மே மாதம் வரை டெபாசிட் வசூல் செய்தது சம்பந்தமான வழக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டது.

இது சம்பந்தமாக, மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை அலுவலகத்தில் 1,09,255 டெபாசிட்தாரர்கள் தங்களது சுமார் ரூ.2438 கோடி பணத்தை திருப்பிப்பெற்றுதரக் கேட்டு புகார் அளித்துள்ளனர். பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் இவ்வழக்கில் இதுவரை 23 பேரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்களின் 170 வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ.102 கோடி முடக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு சொந்தமான 98 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு அவற்றை முடக்கம் செய்ய அரசிடமிருந்து அரசாணை பெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும் வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் துபாய் நாட்டிற்கு தப்பியோடியது கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக லுக் அவுட் சர்க்குலர் மற்றும் ரெட்கார்னர் நோட்டீஸ் ஆகியவை பிறப்பிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அபுதாபி இண்டர்போல் போலீசார், 2023ம் ஆண்டு அக்டோபர் ராஜசேகரை கைது செய்துள்ளனர்.

அவரை இந்தியாவிற்கு கொண்டுவர இந்திய நாடு கடத்தல் சட்டம் 1962ன் கீழ் துபாய் நாட்டிற்கு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பப்பட்ட வேண்டுகோள் துபாய் அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது. இது குறித்து இன்டர்போல் மூலம் துரிதமாக நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ ஏஜென்டாக செயல்பட்டதற்காகவும். வழக்கை முடித்துத்தருகிறேன் என்று கூறி பல கோடி ரூபாய் பெற்றதற்காகவும் 2022ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

எனினும் 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி சென்னை டிஎன்பிஐடி நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதனை எதிர்த்து இஓடபிள்யூ மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் 2024ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதியன்று அன்று சென்னை உயர்நீதிமன்றம் ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து தீர்ப்பு நகல் கிடைக்கப் பெற்ற மூன்று தினங்களுக்குள் சென்னை டிஎன்பிஐடி நீதிமன்றத்தில் சரண்டர் ஆக உத்தர விட்டிருந்தது உத்தரவு நகல் கிடைக்கப் பெற்று மூன்று நாட்கள் ஆகியும் ரூசோ சரண்டர் ஆகாமல் தலைமறைவாகியுள்ளார். எனவே நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பெறப்பட்டு ரூசோவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post ஆருத்ரா கோல்டு மோசடியில் தலைமறைவு ரூசோவை கைது செய்ய தனிப்படை appeared first on Dinakaran.

Tags : Rousseau ,Arudra ,Chennai ,Arudra Gold Trading Private Limited ,
× RELATED ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கு;...