×

ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில் இன்று கோலாகல தொடக்கம்: முதல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி பலப்பரீட்சை

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசன், சென்னையில் இன்று வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் அபிமான டி20 தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் மொத்தம் 10 அணிகள் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றன.

ஒவ்வொரு அணியும் ரவுண்டு ராபின் முறையில் உள்ளூரில், வெளியூரில் என மற்ற 9 அணிகளுடன் தலா 2 முறை மோத உள்ளன. 70 லீக் ஆட்டங்கள், பைனல் உள்பட பிளே ஆப் சுற்றில் 4 ஆட்டங்கள் என மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறும். மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு – ஏப்.7 வரை 21 லீக் ஆட்டங்களுக்கான முதற்கட்ட அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோத உள்ளன.

தொடக்க விழா காரணமாக இரவு 8.00 மணிக்கு ஆட்டம் தொடங்கும். மற்ற நாட்களில் இரவு 7.30க்கும், ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெற்றால் முறையே மாலை 3.30, இரவு 7.30க்கு தொடங்கும். சென்னை அணி புதிய கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலும், ஆர்சிபி அணி டு பிளெஸ்ஸி தலைமையிலும் களமிறங்குகின்றன.

விக்கெட் கீப்பராக தோனி விளையாட உள்ளார். சிஎஸ்கே 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள நிலையில், முதல் பட்டத்துக்காக முட்டிமோதும் ஆர்சிபி, 17வது சீசனை வெற்றியுடன் தொடங்க வரிந்துகட்டுகிறது. டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்துள்ள நிலையில், இன்று சேப்பாக்கம் அரங்கம் நிரம்பி வழியும் என்பதில் சந்தேகமில்லை. பலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

* நேருக்கு நேர்
* இரு அணிகளும் 31 முறை மோதியுள்ளதில் சிஎஸ்கே 20-10 என முன்னிலை வகிக்கிறது (ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது).
* சேப்பாக்கத்தில் 8 முறை மோதியுள்ளதில் சிஎஸ்கே 7-1 என ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
* அதிகபட்சமாக சென்னை 226 ரன், பெங்களூரு 218 ரன் குவித்துள்ளன (சென்னையில் சிஎஸ்கே 205, பெங்களூரூ 202 ரன்).
* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் சிஎஸ்கே 4-1 என முன்னிலை வகிக்கிறது.

அணிகள்
* சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெயிக்வாட் (கேப்டன்), எம்.எஸ்.தோனி, மொயீன் அலி, ஆரவெல்லி அவனிஷ், தீபக் சாஹர், எட்வன் கான்வே, துஷார் பாண்டே, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், டேரில் மிட்செல், முகேஷ் சவுதாரி, முஸ்டாபிசுர் ரகுமான், மதீஷா பதிரணா, அஜிங்க்யா ரகானே, ஷேக் ரஷீத், ரச்சின் ரவிந்திரா, சமீர் ரிஸ்வி, மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரஷாந்த் சோலங்கி, ஷர்துல் தாகூர், மஹீஷ் தீக்‌ஷனா.

* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: டு பிளெஸ்ஸி (கேப்டன்), ஆகாஷ் தீப், அனுஜ் ராவத், மனோஜ் பண்டகே, சவுரவ் சவுகான், டாம் கரன், மயாங்க் தாகர், லோக்கி பெர்குசன், கேமரான் கிரீன், வில் ஜாக்ஸ், அல்ஜாரி ஜோசப், தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி, மகிபால் லோம்ரர், கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ரஜத் பத்திதார், சுயாஷ் பிரபுதேசாய், ராஜன் குமார், ஹிமான்ஷு ஷர்மா, கர்ண் ஷர்மா, ஸ்வப்னில் சிங், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், யஷ் தயாள்.

* சென்னை அணிக்கு தோனி 235 ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார் (2008-2023). சுரேஷ் ரெய்னா (6 ஆட்டங்கள், 2010-2019), ரவீந்திர ஜடேஜா (8 ஆட்டங்கள், 2022) ஆகியோரும் தலைமை வகித்துள்ளனர். இப்போது ருதுராஜ் 4வது கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

The post ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில் இன்று கோலாகல தொடக்கம்: முதல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : IPL T20 Festival - Season 17 ,Chennai ,CSK ,RCB ,IPL T20 ,Chennai Super Kings ,Chepakkam Stadium ,IPL T20 Festival- Season 17 ,Dinakaran ,
× RELATED சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும்...