×

தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகள் வழியாக நடைபெறும் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து ஆலோசனை: திருவள்ளூர், திருப்பதி, சித்தூர் மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்கள் பங்கேற்பு

திருவள்ளூர், மார்ச் 22: தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகள் வழியாக நடைபெறும் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து ஆலோசனை கூட்டத்தில் திருவள்ளூர், திருப்பதி, சித்தூர் மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான த.பிரபுசங்கர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரா.நிவாச பெருமாள் ஆகியோர் தமிழ்நாடு ஆந்திரா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகள் வழியாக சட்டவிரோதமாக நடக்கும் மதுபானம் விற்பனை மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நடைபெறாமல் கண்காணிக்க சிறப்பு குழு அமைத்து நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து காணொளி காட்சி வாயிலாக திருப்பதி மாவட்ட கலெக்டர் ஜி.லட்சுமி ஷா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  கிருஷ்ண காந்த் பட்டேல், சித்தூர் மாவட்ட கலெக்டர் ஷான் மோகன் சாகிலி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஸ்வா ஆகியோர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து மாநிலங்களுக்கு இடையேயான சட்ட விரோத மதுபான விற்பனை தடை செய்வது குறித்தும், எதிர்வரும் நாடாளுமன்றதேர்தலை முன்னிட்டு மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து மாநிலங்களுக்கு இடையான சட்ட விரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்டறிவதற்காக சிறப்பு இயக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு, உரிமை பெறாத வளாகங்களில் மதுபானங்களை சேமிப்பதில் மாநில கலால் சட்டம் அல்லது பிற சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டும். அத்தகைய இயக்க நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைத்து சட்ட அமலாக்க முகமைகளுடன் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.

திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளான ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மற்றும் சித்தூர் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பொம்மாஜிகுளம், நாகலாபுரம், பொன்பாடி, தேவலாம்பாபுரம் ஆகிய எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளின் வழியாக வெளி மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடவடிக்கைகளை தவிர்க்கும் பொருட்டு அரசின் அறிவுரைகளை நெறி தவறாமல் பின்பற்றுமாறு மேற்படி மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனை கடை பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிட வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் காணொளி காட்சிகள் வாயிலாக திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா, உதவி பயிற்சி கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வதஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகள் வழியாக நடைபெறும் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து ஆலோசனை: திருவள்ளூர், திருப்பதி, சித்தூர் மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Andhra Border Region ,Collectors ,Thiruvallur ,Tirupati ,Chittoor ,Tiruvallur ,Chittoor District Collectors ,SPs ,Tamil Nadu - Andhra border ,Thiruvallur District Collector's Office ,Andhra Border ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல்...