×

திருமழிசை, திருவாலங்காடு, பொன்னேரி கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர்த்திருவிழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருவள்ளூர், மார்ச் 22: திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர், பொன்னேரி ஏகாம்பரநாதர் கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் அமைந்துள்ளது குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோயில். இந்த கோயிலில் கடந்த 15ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மேளதாளம், பேண்ட் வாத்தியம் முழங்க வாண வேடிக்கைகளுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். பிறகு மாலையில் வசந்தமண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவில் கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் இன்று மாலை ஊணாங்கொடி சேவையும், இரவில் குதிரை வாகனத்திலும், நாளை காலை சிவிகை உற்சவமும், மாலை  பிக்ஷாடனார் சவுடல் விமான உற்சவமும், 24ம் தேதி காலை  நடராஜர் தரிசனமும், பகல் தீர்த்தம் தொட்டி உற்சவமும், மாலை திருக்கல்யாணமும், இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவமும், அவரோகணப் பல்லக்கு சேவையும்,  சண்டேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது.

25ம் தேதி இரவு தெப்ப உற்சவமும், பஞ்ச மூர்த்தி எழுந்தருளல் நிகழ்ச்சியும், 26ம் தேதி காலை  உமா மகேஸ்வரர் தரிசனமும், இரவு தெப்ப உற்சவமும், சந்திரசேகரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 27ம் தேதி இரவு தெப்ப உற்சவம் மற்றும்  சுப்பிரமணியர் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 28ம் தேதி இரவு  பஞ்சமூர்த்திகள் ஆஸ்தானப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 29ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த தேரோட்டத்தில் பேரூராட்சி தலைவர் வடிவேலு, திமுக பேரூர் செயலாளர் முனுசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் மகாதேவன், செயல் அலுவலர் வெங்கடேஷ், பேரூராட்சி கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் கருணாகரன், பி.ராஜு, விஜயகீர்த்தி, பாலசுப்பிரமணி, கோபிநாத் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

வடாரண்யேஸ்வரர் கோயில்: திருவாலங்காட்டில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலின் உபகோயிலான வடாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், பங்குனி உத்திரதிருவிழா கடந்த 16ம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை உற்சவர் சோமாஸ்கந்தர், திருவாலங்காடின் முக்கிய வீதிகளில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின், முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கமலத் தேர்திருவிழா வெகு விமரிசியாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் ஒன்றிய திமுக செயலாளர் மகாலிங்கம், ஒன்றியக்குழு தலைவர் ஜீவா விஜயராகவன், துணைத் தலைவர் சுஜாதா மகாலிங்கம், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று இரவு 9 மணிக்கு வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. 24ம் தேதி காலை 7 மணிக்கு நடராஜர் வீதி உலாவும், இரவு 8 மணிக்கு சென்றாடு தீர்த்த குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சு.தரன், இணை ஆணையரும், செயல் அலுவலருமான ரமணி, அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன், மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பொன்னேரி ஏகாம்பரநாதர் கோயில்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘‘வட காஞ்சி’’ என அழைக்கப்படும் காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கியது. காலை 8.47 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் வடத்தை பக்தர்கள் பிடித்து இழுத்தனர். பின்னர், தங்களது குடும்பத்தினருடன் ஏகாம்பரநாதரை வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக வரும் 28ஆம் தேதி வரை 13 நாட்கள் விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்களிலும், சிம்ம வாகனம், சூரிய பிரபை, பூத வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களில் சிவபெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 24ம் தேதி திருக்கல்யாண வைபவமும், 28ம் தேதி 108 சங்காபிஷேகத்துடன் நிறைவு விழாவும் நடைபெற உள்ளது. கோவில் அறங்காவலர் அருண் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளார். கொடியேற்று விழாவில், விழா குழுவினர் அனைத்து கட்சி பிரமுகர்கள், அறநிலைத்துறை கோவில் ஊழியர்கள், உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

The post திருமழிசை, திருவாலங்காடு, பொன்னேரி கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர்த்திருவிழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Thiruvizha ,Kolakalam ,Panguni Uthra ,Thirumazhisai ,Thiruvalangadu ,Ponneri ,Thiruvallur ,Panguni ,Uthra ,Thirumazhisai Odhandeswarar ,Thiruvalangadu Vadaranyeswarar ,Ponneri Ekambaranatha ,Poontamalli ,Tirumazhisai ,Naiki ,Tiruvalangadu ,Ponneri Temples ,Therthiruvizha Kolakalam ,
× RELATED கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில்...